ஆதிகேசவ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் மிகச்சிறந்த முறையில் நடைபெறும் அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் மிகச்சிறந்த முறையில் நடத்தப்படும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.
களியக்காவிளை,
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் மிகச்சிறந்த முறையில் நடத்தப்படும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.
பள்ளி கட்டிட பராமரிப்பு பணி
குழித்துறையில் உள்ள மகாதேவர் கோவிலுக்கு சொந்தமான அரண்மனை பள்ளி கட்டிடத்தில் ரூ.32 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அரண்மனை பள்ளி வளாகத்தில் நேற்று குத்துவிளக்கேற்றி பணிகளை பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
குழித்துறை மகாதேவர் கோவிலுக்கு சொந்தமான அரண்மனை தேவசம் உயர்நிலைப்பள்ளி சுமார் 10 ஆண்டுகள் செயல்படாமலும், கட்டிடங்கள் பழுதடைந்த நிலையிலும் இருக்கிறது. அதை சீரமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டுமென்ற பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை ஏற்று, பராமரிப்பு பணிக்காக ரூ.32 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த பணிகள் தற்போது தொடங்கப்பட்டு உள்ளன. பணிகள் விரைவாக முடிக்கப்பட்டு புதுப்பொலிவுடன் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.
அடிப்படை வசதிகள்
குமரி மாவட்டத்தில் பல கோவில்களில் கலை நுட்பங்களுடன் கூடிய சிற்பங்கள், புராதான கோவில்கள் அனைத்தையும் சீரமைப்பதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலின் கும்பாபிஷேகத்திற்கு வரும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேவையான போலீசாரை பணியில் அமர்த்தி பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளவும் துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
மிகச்சிறந்த முறையில்...
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் மிகச்சிறந்த முறையில் நடத்தப்படும். அதிகமான பொதுமக்கள் வருகைபுரிந்தால் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் செய்துகொடுக்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தயாராக இருக்கிறோம்.
தமிழகத்தில் குற்றசெயல்களில் ஈடுபடுவோர் கடுமையாக தண்டிக்கப்பட்டு வருகிறார்கள். குமரி மாவட்டத்தில் நடந்த இரட்டை கொலை சம்பவத்தில் விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள்.
ரூ.200 கோடி
குமரி மாவட்ட சாலைகள் பராமரிப்புக்கு ரூ.45 கோடிக்கு மேல் நிதி பெற்றது கிடையாது. ஆனால் தற்போது ரூ.200 கோடி வரை நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்றுவருகிறது. கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளபெருக்கால் மாவட்டத்தில் அதிகபடியான சாலைகள் சேதமடைந்துள்ளது. அவற்றை சீரமைக்கும்பணி நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் குமரி மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஞானசேகர், மராமத்து பொறியாளர் அய்யப்பன், குழித்துறை நகராட்சி தலைவர் பொன்.ஆசை தம்பி, மேல்புறம் ஒன்றிய செயலாளர் வக்கீல் ராஜேஷ்குமார், ஆசாத் அலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.