ஆதிநாதர் ஆழ்வாா் கோவில் பங்குனி திருவிழா தேரோட்டம்
ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வாா் கோவில் பங்குனி திருவிழா தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
தென்திருப்பேரை:
ஆழ்வார்திருநகரி ஆழ்வார்கோவில் பங்குனி திருவிழா தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பங்குனி திருவிழா
தூத்துக்குடி மாவட்டத்தில் நவதிருப்பதிகளில் 9-வது தலமான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டிற்கான பங்குனி பிரம்மோற்சவ திருவிழா கடந்த மாதம் 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 5-ஆம் திருவிழாவான 31-ந்தேதி கருட சேவை விமரிசையாக நடந்தது.
தேரோட்டம்
திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலையில் பெருமாள் திருவீதி உலா நடந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நேற்று காலையில் நடைபெற்றது. முன்னதாக சுவாமி பொலிந்து நின்றபிரான் காலை 6 மணிக்கு திருத்தேரில் ஏழுந்தருளினாா். காலை 7.30 மணிக்கு பக்தா்கள் 'கோவிந்தா கோபாலா' கோஷங்களுடன் வடம் பிடித்து தேரை இழுத்தனா். தேர் மேல ரதவீதியில் புறப்பட்டு வடக்கு ரதவீதி வழியாக கீழ ரதவீதி, தெற்கு ரதவீதி வந்து மேல ரதவீதியில் பகல் 11 மணிக்கு நிலை வந்து சேர்ந்தது.
கலந்துகொண்டவர்கள்
இந்நிகழ்வில் எம்பெருமானார் ஜீயா் சுவாமிகள், ஆச்சாா்ய புருஷா்கள், கோவில் செயல் அலுவலர் அஜித், முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி உட்பட பக்தர்கள் பலர் கலந்துகொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல்அலுவலர், தக்கார். உபயதாரர்கள் மற்றும் ஊா்மக்கள் செய்து வருகின்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆழ்வார்திருநகரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.