ஆதித்தனார் கல்லூரிரத்ததான கழகத்திற்கு பாராட்டு சான்றிதழ்
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி ரத்ததான கழகத்திற்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரி ரத்த வங்கியின் சார்பில் ஆதித்தனார் கல்லூரியில் ரத்ததான முகாம் ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படுகிறது. ஒவ்வொரு முகாமிலும் அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் தாமாகவே முன்வந்து ரத்த தானம் செய்கின்றனர். மேலும் எப்போழுதெல்லாம் நோயாளிகளுக்கு ரத்தம் தேவைப்படுகின்றதோ, அப்போதும் மாணவர்கள் நேரடியாக ஆஸ்பத்திரிக்கு சென்று ரத்த தானம் செய்கின்றனர். ஆண்டுதோறும் சுமார் 200 மாணவர்கள் ரத்த தானம் வழங்குகின்றனர்.
மாணவர்களின் தன்னலமன்ற சேவையை பாராட்டும் வகையில், ஆதித்தனார் கல்லூரியின் ரத்ததான கழகத்திற்கு பாராட்டு சான்றிதழை அரசு ஆஸ்பத்திரி முதன்மை டாக்டர் பொன்ரவி, டாக்டர்கள் பாபநாசகுமார், சசிகலா முன்னிலையில் வழங்கப்பட்டது. இதையடுத்து மாணவர்களை கல்லூரி முதல்வர் மகேந்திரன், கல்லூரி செயலாளர் ஜெயக்குமார், ரத்த தான கழக ஒருங்கிணைப்பாளர்கள் அந்தோணி சகாய சித்ரா, மோதிலால் தினேஷ் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.