ஆதித்தனார் கல்லூரியில்ஆரோக்கிய மன்ற தொடக்கவிழா
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் ஆரோக்கிய மன்ற தொடக்கவிழா நடைபெற்றது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் ஆரோக்கிய மன்ற தொடக்க விழா நடைபெற்றது. இவ்விழாவை கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தொடங்கி வைத்தார். ஆரோக்கிய மன்ற தலைவர் கவிதா வரவேற்று பேசினார். இவ்விழாவில் திருசெந்தூர் தொகுதி வளமைய கல்வியாளர் ஜெயாஹெலன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, ஆரோக்கியத்தின் முக்கியத்துவம், ஆரோக்கியமாக வாழ்வதற்கான வழிமுறைகள் பற்றி மாணவர்களுக்கு விளக்கி பேசினார். மேலும், தொடர்ச்சியாக உடற்பயிற்சி மேற்கொள்பவர்கள், சிறந்த மன ஆரோக்கியம் மற்றும் உடல் ஆரோக்கியத்தை பெற்று வாழ்வில் நோயற்ற வாழ்வை எதிர்கொள்வார்கள் என அவர் தெரிவித்தார். ஆரோக்கிய மன்ற செயல் உறுப்பினர் தீபாராணி நன்றி கூறினார். விழாவில் கல்லூரி பேராசிரியர்களும், மாணவர்களும் திரளாக கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை மன்ற மாணவச் செயலாளர் சுபாஷ், வேதியியல் துறை பேராசிரியர்கள் ஜெஸிந்த்மிஸ்பா, அபுல்கலாம் ஆஷாத், கோடிஸ்பதி, ராம்தாஸ் ஆகியோர் செய்திருந்தனர்.
மேலும், திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் என்.சி.சி. தரைப்படை மாணவர்களுக்கு 'சர்வீஸ் செலக்சன் போர்டு (எஸ்.எஸ்.பி.) தேர்வில் வெற்றி பெறுவது' என்ற தலைப்பில் பயிலரங்கம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கி பேசினார். அவர் பேசுகையில், ''தேசிய மாணவர் படையில் சேர்வதால் மாணவர்கள் உடல் தகுதி, ஆளுமைத்திறனை வளர்த்து கொள்ளுதல், ஒழுக்கத்தை பின்பற்றுதல், வேலைவாய்ப்பில் முன்னுரிமை பெறுதல் போன்ற பயன்களை பெற முடியும்'' என்று கூறினார். தேசிய மாணவர்படை அதிகாரி லெப்டினன்ட் சிவமுருகன் வரவேற்று பேசினார்.
29-வது தனிப்படை பிரிவு கமாண்டிங் ஆபிசர் லெப்டினன்ட் கர்னல் பிரதோஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், ''செலக்சன் போர்டு தேர்வினை எதிர்கொள்ள மாணவர்கள் தேவையான பொது அறிவு, ஆங்கிலப்புலமை, கணிதத்திறன், நுண்ணறிவு, உடல் தகுதித்திறனை மேம்படுத்தி கொள்ள வேண்டும். தேர்வில் வெற்றி பெறுகிறவர்கள் சமுதாயத்திற்கு பயன்பெறும் வகையில் ராணுவத்தில் அதிகாரியாக பணியாற்ற முடியும்'' என்று கூறினார். தேசிய மாணவர் படை மாணவர் விஷ்ணு நன்றி கூறினார். ஏற்பாடுகளை கல்லூரி முதல்வரின் ஆலோசனையின்பேரில், தேசிய மாணவர் படை அதிகாரி லெப்டினன்ட் சிவமுருகன் மற்றும் மாணவர்கள் செய்து இருந்தனர்.