தொற்று நோயால் ஆதிவாசி குழந்தைகள் பாதிப்பு


தொற்று நோயால் ஆதிவாசி குழந்தைகள் பாதிப்பு
x
தினத்தந்தி 1 May 2023 12:15 AM IST (Updated: 1 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கூடலூர் பகுதியில் ஆதிவாசி குழந்தைகள் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் உரிய சிகிச்சை மேற்கொள்ளாததால் மற்ற குழந்தைகளுக்கும் பரவி வருகிறது.

நீலகிரி

கூடலூர்,

கூடலூர் பகுதியில் ஆதிவாசி குழந்தைகள் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் உரிய சிகிச்சை மேற்கொள்ளாததால் மற்ற குழந்தைகளுக்கும் பரவி வருகிறது.

தொற்று நோயால் பாதிப்பு

நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதியில் காட்டு நாயக்கர், பனியர், குரும்பர் ஆதிவாசி மக்கள் கணிசமாக வசித்து வருகின்றனர். அவர்கள் கல்வி மற்றும் பொருளாதார நிலையில் தொடர்ந்து பின்தங்கியே உள்ளனர். கடந்த சில வாரங்களாக கூடலூர் பகுதியில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.

இதனால் கொசுக்கள் பெருகி வருகிறது. தொடர்ந்து பகல், இரவு என எந்த நேரமும் கொசுக்கடியும் அதிகரித்து வருகிறது. இதையடுத்து கோடைகால நோய்களும் பரவி வருகிறது. இந்தநிலையில் கூடலூர் காளம்புழா ஆதிவாசி கிராமத்தில் கழிவுநீர் வாய்க்கால்கள் சுகாதாரமின்றி காணப்படுகிறது. மேலும் ஆதிவாசி குழந்தைகள் பலர் தொற்று நோயான சிரங்கு நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் அவர்கள் உரிய மருத்துவ சிகிச்சை பெறாமல் இருப்பதால், சிரங்கு நோய் பிற குழந்தைகளுக்கும் பரவி வருகிறது.

சிகிச்சை அளிக்கப்படுமா?

இதுகுறித்து ஆதிவாசி குழந்தைகளின் பெற்றோர்களிடம் கேட்டபோது, குழந்தைகளை சொரி, சிரங்கு தாக்கி உள்ளது. அது தானாகவே சரியாகி விடும் என அறியாமையில் பதிலளித்தனர். இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும்போது, நாம் சுகாதாரமாக இல்லாவிட்டால் நோய்கள் எளிதாக தாக்கும். இதுகுறித்து ஆதிவாசி மக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுவதில்லை.

மேலும் ஆரோக்கியமாக இருப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், அதை பின்பற்றுவது இல்லை. தற்போது ஆதிவாசி குழந்தைகளுக்கு சிரங்கு பரவுவது குறித்து அனைத்து கிராமங்களிலும் ஆய்வு நடத்தப்படும். தொடர்ந்து முகாம்கள் அமைத்து சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.


Next Story