மசினகுடியில் கல்குவாரி நீரில் மூழ்கி ஆதிவாசி பலி
மசினகுடியில் கல்குவாரியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஆதிவாசி கூலி தொழிலாளி நீரில் மூழ்கி பலியானார்.
கூடலூர்
மசினகுடியில் கல்குவாரியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஆதிவாசி கூலி தொழிலாளி நீரில் மூழ்கி பலியானார்.
ஆதிவாசி
நீலகிரி மாவட்டம் மசினகுடி குரும்பர்பாடியைச் சேர்ந்தவர் ஆதிவாசி மாதன். இவரது மகன் மதன் என்ற டிஸ்கோ மதன் (வயது 45). இவர் கூலி வேலை செய்து வந்தார். மேலும் குடி பழக்கமும் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் பஜாரில் சுற்றி வந்தார்.
தொடர்ந்து மசினகுடி மாகோலி பகுதியில் உள்ள கல் குவாரியில் மாலை மீன் பிடிக்கச் சென்றார். ஆனால் வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதைத் தொடர்ந்து குடும்பத்தினர் உறவினர்கள் பல இடங்களில் தேடினர். ஆனால் மதன் பற்றிய தகவல் தெரியவில்லை. இந்த நிலையில் நேற்று காலை கல்குவாரி பகுதியில் ஆதிவாசி மக்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
நீரில் மூழ்கி பலி
அப்போது குவாரியில் உள்ள குட்டையில் மதன் அணிந்திருந்த துணிகள் மிதந்து கொண்டிருந்தது. அதன் பின்னரே அவர் நீரில் மூழ்கி பலியானது உறுதி செய்யப்பட்டது. தகவல் அறிந்த மசினகுடி போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் குட்டையில் இறங்கி தீயணைப்புத் துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது கல்குவாரி பாறை இடுக்கில் இறந்த நிலையில் சிக்கியிருந்த மதன் உடலை தீயணைப்புதுறையினர் மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு உடல் அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து மசினகுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.