கான்கிரீட் வீடுகளுக்காக ஓராண்டுக்கு மேல் காத்திருக்கும் ஆதிவாசி மக்கள்


கான்கிரீட் வீடுகளுக்காக ஓராண்டுக்கு மேல் காத்திருக்கும் ஆதிவாசி மக்கள்
x

கூடலூரில் கான்கிரீட் வீடுகள் கட்டும் பணி பாதியில் நிற்கிறது. இதனால் ஓராண்டுக்கு மேல் ஆதிவாசி மக்கள் காத்திருந்து வருகின்றனர்.

நீலகிரி

கூடலூர்,

கூடலூரில் கான்கிரீட் வீடுகள் கட்டும் பணி பாதியில் நிற்கிறது. இதனால் ஓராண்டுக்கு மேல் ஆதிவாசி மக்கள் காத்திருந்து வருகின்றனர்.

முழுமை பெறாத வீடுகள்

நீலகிரி மாவட்டத்தில் இருளர், குறும்பர், காட்டு நாயக்கர், பனியர் என ஆதிவாசி மக்கள் ஆயிரக்கணக்கானோர் வசித்து வருகின்றனர். அடர்ந்த வனம் மற்றும் அதன் கரையோரம் வசிப்பதால் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கூடலூர் பகுதியில் ஆதிவாசி கிராமங்களில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ.3 லட்சம் செலவில் கான்கிரீட் வீடுகள் கட்டும் பணி கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.

கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட அள்ளூர் வயல், ஸ்ரீ மதுரை ஊராட்சி கொரவயல், மேலம்பலம், வடவயல், குண்டூர் ஆதிவாசி கிராமங்களில் 96 வீடுகள் கட்டும் பணி தொடங்கப்பட்டது. ஆனால், இதுவரை பணிகள் முழுமை பெறவில்லை. இதன் காரணமாக குடிசைகள் மற்றும் கொட்டகைகளில் ஆதிவாசி மக்கள் தங்களது குழந்தைகளுடன் கடும் சிரமத்துடன் வசித்து வருகின்றனர். தற்போது மழைக்காலம் என்பதால் குடிசைக்குள் தண்ணீர் ஒழுகுகிறது.

வீணாகும் அவல நிலை

கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு பெய்த தொடர் கனமழையில் ஆதிவாசி மக்கள் கடும் அவதி அடைந்தனர். வீடுகள் கட்டுவதற்கு ஒதுக்கப்பட்ட நிதி போதுமானதாக இல்லாததால், ஒப்பந்ததாரர்கள் பணிகளை முழுமையாக மேற்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக கான்கிரீட் வீடுகள் எந்தவித பயனும் இன்றி, தொடர் மழையில் வீணாகும் அவல நிலை காணப்படுகிறது.

எனவே, சம்பந்தப்பட்ட துறையினர் கூடுதல் நிதி ஒதுக்கி வீடுகளை முழுமையாக கட்டி கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆதிவாசி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து மலைவாழ் மக்கள் சங்க நிர்வாகி சி.கே.மணி கூறும்போது, கூடலூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஆதிவாசி மக்களுக்கு 96 வீடுகள் கட்டப்பட்டு, ஒரு ஆண்டாக பணி முழுமை பெறாமல் பாதியில் நிற்கிறது. மேலும் வீடுகளில் தூண்களும் (பில்லர்கள்) இல்லை. சுவரை கட்டி கான்கிரீட் மேல் தளம் அமைக்கப்பட்டது. இதனால் வீடுகள் விரைவில் சேதம் அடைய வாய்ப்பு உள்ளது. இது தொடர்பாக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


Next Story