ஆதிவாசி மக்களுக்கு சாலை வசதி செய்து தரப்படும்


ஆதிவாசி மக்களுக்கு சாலை வசதி செய்து தரப்படும்
x

சேப்பட்டி ஆதிவாசி மக்களுக்கு சாலை வசதி செய்து தரப்படும் என தேவர்சோலை பேரூராட்சி தலைவர் உறுதி அளித்தார்.

நீலகிரி

கூடலூர்,

சேப்பட்டி ஆதிவாசி மக்களுக்கு சாலை வசதி செய்து தரப்படும் என தேவர்சோலை பேரூராட்சி தலைவர் உறுதி அளித்தார்.

பழுதடைந்த சாலை

கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சி 18-வது வார்டில் சேப்பட்டி பகுதியில் ஆதிவாசி மக்கள், பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் ஆதிவாசி மக்களின் குடியிருப்பு பகுதிக்கு செல்லும் வழியில் ஆற்று வாய்க்கால் குறுக்கே பாலம் கட்டி தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதேபோல் அப்பகுதியில் உள்ள சாலை மிகவும் பழுதடைந்து காணப்பட்டது. இதனால் அவசர காலங்களில் நோயாளிகள், கர்ப்பிணிகளை மருத்துவ சிகிச்சைக்கு கொண்டு செல்வதற்கு வாகனங்கள் இயக்க முடியாமல் உள்ளது. மேலும் மழைக்காலங்களில் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். இதுகுறித்து தேவர்சோலை பேரூராட்சி நிர்வாகத்திடம் ஆதிவாசி மக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.

நடவடிக்கை எடுப்பதாக உறுதி

இதைத்தொடர்ந்து பேரூராட்சி மன்ற தலைவர் வள்ளி, துணை தலைவர் யூனைஸ் பாபு ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். அப்போது அப்பகுதியில் மிகவும் பழுதடைந்த சாலையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் சீரமைப்பு பணி மேற்கொண்டு சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். தொடர்ந்து பாலம் வசதி செய்து தரப்படும் என்று உறுதியளித்தனர்.

இதுகுறித்து ஆதிவாசி மக்கள் கூறியதாவது:-

பேரூராட்சிக்கு உட்பட்ட சேப்பட்டி பகுதி மிகவும் பின் தங்கியதாக உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. பாலமும் அமைத்து தர வேண்டும். இதே போல் தெருவிளக்கும் சரிவர எரிவது இல்லை. எனவே, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story