கூடலூர் அருகே அடிப்படை வசதி இல்லாத ஆதிவாசி கிராமம்-உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
விலங்கூர் குழிமூலா நாயக்கர் காலனியில் அடிப்படை வசதி இல்லாமல் ஆதிவாசி கிராம மக்கள் அவதிபட்டு வருகின்றனர். இதனால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கூடலூர்
விலங்கூர் குழிமூலா நாயக்கர் காலனியில் அடிப்படை வசதி இல்லாமல் ஆதிவாசி கிராம மக்கள் அவதிபட்டு வருகின்றனர். இதனால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இருளில் வசிக்கும் ஆதிவாசி மக்கள்
கூடலூர் அருகே விலங்கூர் குழிமூலா ஆதிவாசி காலனியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகிறது. இங்கு பலருக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதன் காரணமாக பெரும்பாலானோர் குடிசைகளில் வசித்து வருகின்றனர். இதேபோல் மின்சாரம் மற்றும் தெருவிளக்கு வசதி இல்லாமல் அவதிப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறைக்கு பலமுறை தகவல் தெரிவித்தும் தெருவிளக்கு சரி செய்யப்படவில்லை. மேலும், வீடுகள் கட்டித்தர வேண்டும் என கோரிக்கை விடுத்தும் உரிய நடவடிக்கை இதுவரை எடுக்கப்படவில்லை. தெருவிளக்கு ஒளிராத காரணத்தால் இருளில் வசித்து வருவதாக தெரிவித்தனர்.
காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு
இது குறித்து ஆதிவாசி மக்கள் கூறியதாவது:- கிராமத்துக்கு வரும் வழியில் முக்கிய சாலையில் சில இடங்களில் மட்டுமே தெருவிளக்குகள் சரியாக ஒளிர்கிறது. ஆனால் மற்ற இடங்களில் உள்ள தெருவிளக்குகள் ஒளிராமல் பழுதடைந்து காணப்படுகிறது.
இதனால் வீடுகளை சுற்றிலும் போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் இருளில் வசிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம். அதேபோல் வனப்பகுதி என்பதால் காட்டு யானைகள் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. மேலும் இப்பகுதியில் கிணறு இருந்தும் வாரத்துக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வழங்கப்படுகிறது.
சில சமயங்களில் அதுவும் சரிவர வழங்குவதில்லை. இதனால் மிகுந்த சிரமம் அடைந்துள்ளோம். எனவே குடிசைகளுக்கு பதிலாக வீடுகள் கட்டித் தர வேண்டும். மின்சாரம் தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் ஒளிராத தெருவிளக்குகளை உடனே சீரமைத்து இருளை போக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அடிப்படை வசதிகள் செய்திட நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முனவரவேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.