போலீஸ்காரர்கள் மீது கூடுதல் சட்டப்பிரிவுகளை சேர்க்கக் கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு
சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கில் போலீஸ்காரர்கள் மீது கூடுதல் சட்டப்பிரிவுகளை சேர்க்கக்கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்படுகிறது என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கில் போலீஸ்காரர்கள் மீது கூடுதல் சட்டப்பிரிவுகளை சேர்க்கக்கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்படுகிறது என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
இரட்டைக்கொலை
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை கடந்த 2020-ம் ஆண்டு அங்குள்ள போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார் தாக்கியதில் படுகாயம் அடைந்து பரிதாபமாக அவர்கள் இருவரும் இறந்தனர்.
இந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. போலீசார் வழக்கு பதிவு செய்து, சாத்தான்குளத்தின் அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்ளிட்ட 9 போலீசாரை கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
கூடுதல் சட்டபிரிவுகள்
இந்த நிலையில் கடந்த ஆண்டு மதுரை ஐகோர்ட்டில் சி.பி.ஐ. தாக்கல் செய்த மனுவில், ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் கொல்லப்பட்ட வழக்கில் சில சட்டப்பிரிவுகளை கீழ்கோட்டு நீக்கியது. இது சட்டவிரோதம். இந்த இரட்டை கொலையில் கூட்டுச்சதி முக்கியத்துவம் வாய்ந்துள்ளது. உரிய சட்டப்பிரிவுகளை கூடுதலாக சேர்க்க உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு நேற்று நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது.
தீர்ப்பு ஒத்தி வைப்பு
அப்போது சி.பி.ஐ. வக்கீல் ஆஜராகி, தந்தை-மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவற்றில் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான ஆதாரங்கள் ஏராளமாக உள்ளன. கூட்டுச்சதி உள்ளிட்ட கூடுதல் சட்டப்பிரிவுகள் இந்த வழக்கில் சேர்க்கப்படாத பட்சத்தில் அது குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு சாதகமாக அமைந்து விடும். இந்த சட்டப்பிரிவுகளை சேர்க்க கீழ் கோர்ட்டுக்கு உத்தரவிட வேண்டும் என்று வாதாடினார்.
பின்னர் எதிர் தரப்பு வக்கீல்கள் ஆஜராகி, வாதாடுகையில், இந்த வழக்கில் சி.பி.ஐ.யின் கோரிக்கை ஏற்புடையதல்ல. எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதாடினர்.
அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி, தீர்ப்புக்காக இந்த வழக்கை வருகிற 21- ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.