ஆதித்தனார் கல்லூரியில் மாணவர் சேர்க்கை
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
ஏழை மாணவர்களுக்கு தரமான உயர்கல்வி
திருச்செந்தூரில் 'தமிழர் தந்தை' சி.பா.ஆதித்தனாரால் கடந்த 1965-ம் ஆண்டு ஆதித்தனார் கலை அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டது. ஒழுக்கம், கல்வி, மேம்பாடு ஆகியவற்றை குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் இக்கல்லூரியில் கிராமப்புற மாணவர்கள் தரமான உயர்கல்வி பெற்று தன்னிறைவோடு வாழவும், வளமான இந்திய குடிமக்களாக திகழவும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
கடந்த 56 ஆண்டுகளாக தாய் நாட்டின் பெருமைகளையும், பண்பாட்டையும் காக்கும் விதத்தில் தரமான கல்வியை வழங்கி வரும் இக்கல்லூரியானது ஏழை மாணவர்களும் படித்து வாழ்வில் முன்னேற வேண்டும் என்னும் நோக்கத்திற்காக அரசு உதவிபெறும் கல்லூரியாக தொடங்கப்பட்டது. இக்கல்லூரி தேசிய தர மதிப்பீ்ட்டு குழுவினரால் ஆராயப்பட்டு மூன்றாம் சுழற்சியிலும் 'ஏ' தரச்சான்றிதழை பெற்றுள்ளது.
பாடப்பிரிவுகள்
இக்கல்லூரியில் இளங்கலை பாடப்பிரிவுகளாக ஆங்கிலம், பொருளியல், மற்றும் இளம் அறிவியல் பாடப்பிரிவுகளாக கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், கணினி அறிவியல் (அரசு உதவி மற்றும் சுயநிதி), இளம் வணிகவியல் (அரசு உதவி மற்றும் சுயநிதி), இளநிலை வணிக நிர்வாகவியல் என 9 பிரிவுகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.
முதுநிலை பாடப்பிரிவுகளாக ஆங்கிலம், பொருளியல், கணிதம், வேதியியல், விலங்கியல், ஆய்வியல் படிப்புகளாக எம்.பில். பொருளியல் (சுயநிதி), ஆங்கிலம் (சுயநிதி), கணிதம் (சுயநிதி), வேதியியல் (சுயநிதி), விலங்கியல் (சுயநிதி), பிஎச்.டி. பொருளியல், ஆங்கிலம், வேதியியல், விலங்கியல், கணிதம் ஆகியவை உள்ளன.
சிறந்த நூலகம், தங்கும் விடுதி
கல்லூரியில் அனுபவமிக்க பேராசிரியர்களால் பாடங்கள் பயிற்றுவிக்கப்படுகிறது. மாணவர்கள் கல்வியில் பல்கலைக்கழக அளவில் தொடர்ந்து சாதனை புரிந்து வருகின்றனர். மேலும் மாணவர்கள் மாலை நேரங்களில் என்.சி.சி., என்.எஸ்.எஸ்., ஒய்.ஆர்.சி., விளையாட்டுகள், சமுதாய வானொலி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளிலும் சிறந்த முறையில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
கல்லூரியில் சிறந்த நூலகம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், தங்கும் விடுதி வசதி உள்ளது. வளாகத்தேர்வு மூலம் பல்வேறு நிறுவன பணியிடங்களுக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மாணவர் சேர்க்கை
கல்லூரியில் 2022-2023-ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. கல்லூரியில் சேர விரும்பும் மாணவர்கள் www.aditanarcollege.com என்ற இணையதளத்தில் வருகிற 4-ந்தேதி (திங்கட்கிழமை) மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
சுயநிதி பிரிவுக்கு தனி விண்ணப்பமும், அரசு உதவிபெறும் பிரிவுக்கு தனி விண்ணப்பமும் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04639-220625, 220632, 242232 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இந்த தகவலை ஆதித்தனார் கல்லூரி முதல்வர் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.