காய்ச்சலால் அனுமதிக்கப்பட்ட பச்சிளங்குழந்தை இறப்பு
அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்ட 10 நாள் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் போலியான முகவரியை கொடுத்த தாய் தலைமறைவாகி விட்டார்.
அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்ட 10 நாள் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் போலியான முகவரியை கொடுத்த தாய் தலைமறைவாகி விட்டார்.
குழந்தைகள் வார்டு
வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை குழந்தைகள் நல பிரிவில் கடந்த 8-ந் தேதி காட்பாடி அருகே உள்ள ரத்தனகிரி பகுதியை சேர்ந்த சங்கீதா (வயது 25) என்பவர் ஆண் குழந்தையுடன் வந்தார். பிறந்து 10 நாட்களே ஆன அந்த குழந்தை காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்ததால் டாக்டர்கள் சிறப்பு வார்டில் குழந்தையை அனுமதித்து சிகிச்சை அளித்தனர்.
குழந்தை அபாய கட்டத்தில் உள்ளதாக தாய் சங்கீதாவிடம் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து விட்டது. அப்போது, இந்த தகவலை குழந்தையின் தாயிடம் டாக்டர்கள் தெரிவிக்க வந்துள்ளனர். ஆனால் மருத்துவமனையில் குழந்தையின் தாய் சங்கீதா இல்லை.
இதனையடுத்து மருத்துவ அதிகாரிகள் சங்கீதா அளித்த முகவரியை பதிவேடுகளில் ஆய்வு செய்தனர். ஆனால் அந்த முகவரியும் போலியானது என தெரியவந்தது. இதையடுத்து இறந்த குழந்தையை பிரேத பரிசோதனை கூடத்தில் வைத்துள்ளனர்.
கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு
மேலும் இது குறித்து வேலூர் தாலுகா போலீசில் புகார் செய்துள்ளனர். மருத்துவமனை வளாகம் முழுவதும் உள்ள கேமராப்பதிவுகளை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு குழந்தையின் தாய் தப்பிச்சென்ற பாதையை வைத்து போலீசார் தேடி வருகின்றனர்.