அ.தி.மு.க. பிரமுகர்கள் 2 பேர் கைது
திருச்சி அருகே அரசு வேலை வாங்கி தருவதாக கூறி நர்சிடம் ரூ.4 லட்சம் மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த அ.தி.மு.க. பிரமுகர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி அருகே அரசு வேலை வாங்கி தருவதாக கூறி நர்சிடம் ரூ.4 லட்சம் மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த அ.தி.மு.க. பிரமுகர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
நர்சு வேலை
திருச்சியை அடுத்த திருவெறும்பூர் அருகே உள்ள கீழகுமரேசபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அருண்பிரசாத். இவரது மனைவி மார்கிரேட்ஜெனிபர். இவர் நர்சிங் முடித்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு அ.தி.மு.க. பிரமுகர்களான கிருஷ்ண சமுத்திரத்தை சேர்ந்த லாசர், தேனீர்பட்டியை சேர்ந்த வீரமலை, சூரியூரை சேர்ந்த சுப்பிரமணி ஆகியோர் மார்கிரேட்ஜெனிபரை தொடர்பு கொண்டனர். அவர்கள், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கரிடம் கூறி அரசு ஆஸ்பத்திரியில் நர்சு வேலை வாங்கி தருவதாக மார்கிரேட்ஜெனிபரிடம் கூறியுள்ளனர்.
ரூ.4 லட்சம்
இதற்காக அவர்கள் மார்கிரேட்ஜெனிபரிடம் ரூ.4 லட்சம் வாங்கி உள்ளனர். இதைத்தொடர்ந்து கொரோனா காலத்தில் அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக வேலைக்கு சேர்த்து விட்டுள்ளனர். ஆனால் 3 மாதங்களில் அவரை பணியில் இருந்து நீக்கி விட்டனர். அப்போது தான் அவருக்கு தான் ஏமாற்றப்பட்டது தெரிந்தது. அதாவது, தற்காலிக பணியை நிரந்தர பணி என்று கூறி அவர்கள் 3 பேரும் ரூ.4 லட்சம் வாங்கி மோசடி செய்தது தெரியவந்தது.இதுகுறித்து கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 22-ந்தேதி துவாக்குடி போலீஸ் நிலையத்தில் மார்கிரேட்ஜெனிபர் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாசரை கைது செய்தனர். தற்போது அவர் ஜாமீனில் வெளியே வந்துவிட்டார்.
காத்திருப்பு போராட்டம்
மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய சுப்பிரமணி, வீரமலை ஆகியோர் முன்ஜாமீன் கேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அவர்களுக்கு நிபந்தனையின்படி முன்ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனால் நிபந்தனையை அவர்கள் நிறைவேற்றாததால், முன்ஜாமீன் ரத்து ஆனது. அதன்பிறகும் 2 பேரையும் போலீசார் கைது செய்யவில்லை.அதேநேரம் மார்கிரேட்ஜெனிபருக்கு பணமும் கிடைக்கவில்லை. இதனால் மார்கிரேட் ஜெனிபர் போலீஸ் உயர்அதிகாரிகளிடம் புகார் கொடுத்துள்ளார். ஆனாலும் நடவடிக்கை எடுக்காமல் போலீசார் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். இதையடுத்து மார்கிரேட் ஜெனிபர் தலைமறைவாக உள்ள 2 பேரையும் கைது செய்து பணத்தை மீட்டுக்கொடுக்கும்படி மத்திய மண்டல ஐ.ஜி. அலுவலகம் முன், நேற்று காலை காத்திருப்பு போராட்டம் நடத்த அனுமதி கேட்டு மனு கொடுத்து இருந்தார்.
அ.தி.மு.க. பிரமுகர்கள் 2 பேர் கைது
இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு வீரமலையை போலீசார் கைது செய்தனர். ஆனாலும் சுப்பிரமணியையும் கைது செய்யக்கோரி நேற்று காலையில் மத்திய மண்டல ஐ.ஜி. அலுவலகம் முன் மார்கிரேட்ஜெனிபர் காத்திருப்பு போராட்டம் நடத்த வந்தார். உடனே போலீசார் அவரை சமரசம் செய்து அனுப்பிவைத்தனர்.அதன் பின்னர் நேற்று காலை சுப்பிரமணியையும் துவாக்குடி போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட வீரமலை அ.தி.மு.க.வில் திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய பொருளாளராக உள்ளார். இதேபோல் சுப்பிரமணி முன்னாள் மாவட்ட எம்.ஜி.ஆர். அணி துணை செயலாளர் ஆவார்.