பீனிக்ஸ் பறவை போல் வீறுகொண்டு எழுந்து மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும்


பீனிக்ஸ் பறவை போல் வீறுகொண்டு எழுந்து மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும்
x

பீனிக்ஸ் பறவை போல் மீண்டும் வீறு கொண்டு எழுந்து 2026-ம் ஆண்டு தமிழ் நாட்டில் ஆட்சி அமைக்கும் என்று பல்லடத்தில் அ.தி.மு.க. சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறினார்.

திருப்பூர்

பீனிக்ஸ் பறவை போல் மீண்டும் வீறு கொண்டு எழுந்து 2026-ம் ஆண்டு தமிழ் நாட்டில் ஆட்சி அமைக்கும் என்று பல்லடத்தில் அ.தி.மு.க. சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறினார்.

ஆர்ப்பாட்டம்

அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி மீது பொய் வழக்கு போட்டதாக தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்டம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் பல்லடம்-கொசவம்பாளையம் ரோட்டில் நடைபெற்றது. எம்.எஸ்.எம்.ஆனந்தன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. கே.பி.பரமசிவம், தெற்கு ஒன்றிய செயலாளர் சித்துராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகரச் செயலாளர் ராமமூர்த்தி வரவேற்றார்.

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான உடுமலை ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசியதாவது:-

பொய் வழக்கு

தி.மு.க. அரசு வாக்களித்த மக்களுக்கு நல்ல திட்டங்களை தராமல், பழிவாங்கும் படலத்தை மட்டுமே செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. காவல்துறையை ஏவல் துறையாக்கி பொய் வழக்கு போடுவதற்கு மட்டுமே தி.மு.க. அரசு காவல்துறையை பயன்படுத்தி வருகிறது. அவர்கள் எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும் அதனை தவிடு பொடியாக்கும் சக்தி அ.தி.மு.க.வுக்கு உண்டு.

முன்னாள் முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் கட்டிக்காத்த இயக்கம் இது. எத்தனையோ வழக்குகளை சந்தித்து இருக்கிறோம். இது போன்ற பொய் வழக்குகளுக்கு அ.தி.மு.க. தொண்டர்கள் பயப்பட மாட்டார்கள். இத்துடன் பொய் வழக்கு போடுவதை தி.மு.க. நிறுத்திக் கொள்ள வேண்டும்.

பீனிக்ஸ் பறவை போல்

தி.மு.க. ஆட்சிக்கு வந்த 22 மாத காலத்தில் மிகப்பெரிய மக்கள் விரோதத்தை சம்பாதித்துள்ளது. தமிழ்நாட்டில் வேறு எந்த கட்சியும் இப்படி மக்கள் விரோதத்தை சம்பாதிக்கவில்லை. மு.க.ஸ்டாலின் செய்த ஒரே சாதனை உதயநிதியை அமைச்சராக்கியதுதான். அவர் வேறு எந்த சாதனையும் செய்யவில்லை. அ.தி.மு.க. பீனிக்ஸ் பறவை போல் மீண்டும் வீறு கொண்டு எழுந்து 2026-ம் ஆண்டு தமிழ் நாட்டில் ஆட்சி அமைக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிர்வாகிகள் தர்மராஜன், லட்சுமணன், நடராஜன், மிருதுளா நடராஜன், கோகுல், ரமேஷ் மற்றும் கூட்டுறவு சங்கத் தலைவர் துரைக்கண்ணன், கந்தசாமி, கிருஷ்ணமூர்த்தி, சித்ராதேவி, ஒன்றிய செயலாளர்கள் யூ.எஸ்.பழனிசாமி, சிவபிரகாஷ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story