நெல்லை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும்
எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப் பதிவுக்கு கண்டனம் தெரிவித்து நெல்லை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும் என தச்சை கணேசராஜா கூறினார்.
நெல்லை மாவட்ட அ.தி.மு.க. ஜெயலலிதா பேரவை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நெல்லையில் நேற்று நடந்தது. மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமை தாங்கினார். ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் ஜெரால்டு முன்னிலை வகித்தார். கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.பி.ஆதித்தன், மகளிரணி செயலாளர் ஜான்சிராணி, முன்னாள் கவுன்சிலர் ஆறுமுகம், பகுதி செயலாளர் திருத்துசின்னத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாடு எதிர்க்கட்சித்தலைவரும், அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மீது உள்நோக்கத்துடன் தமிழக அரசு பொய்யான வழக்குகளை பதிவு செய்துள்ளது. இதற்கு நெல்லை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறோம்.
எடப்பாடி பழனிசாமி மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெறாவிட்டால் நெல்லை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் போலீசார் அனுமதி பெற்று மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்.
ரூ.79 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் கொரோனா காலத்திலும் கூட அம்மா உணவகத்தில் 3 நேரமும் உணவு வழங்கப்பட்டது. ஆனால் தற்போது அம்மா உணவகங்கள் செயல்படாமலும், பாதி இடங்களில் உணவுகள் தரமற்ற முறையிலும் வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.