அ.தி.மு.க. முற்றும் மோதல் : மாவட்ட செயலாளர்களை அணி சேர்ப்பதற்கு தனிதனியாக முயற்சி
மாவட்ட செயலாளர்களை அணி சேர்ப்பதற்கு ஓ.பன்னீர் செல்வமும், எடப்பாடி பழனிசாமி தரப்பு தனிதனியாக முயற்சி செய்து வருகின்றனர்.
மாவட்ட செயலாளர்களை அணி சேர்ப்பதற்கு ஓ.பன்னீர் செல்வமும், எடப்பாடி பழனிசாமி தரப்பு தனிதனியாக முயற்சி செய்து வருகின்றனர்.சென்னை
அ.தி.மு.க. பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராகவும், எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளராகவும் இருந்து கட்சியை வழி நடத்தி வருகிறார்கள். அ.தி.மு.க.வில் எந்த முடிவாக இருந்தாலும் இருவரும் கலந்து ஆலோசித்தே முடிவுகளை வெளியிட்டு வந்த நிலையில் கடந்த 14-ந்தேதி நடைபெற்ற தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஒற்றை தலைமை கோஷம் எதிரொலித்தது. இரட்டை தலைமை இருப்பதால் கட்சி சார்ந்த முடிவுகளை எடுப்பதில் காலதாமதம் ஏற்படுவதாக அ.தி.மு.க. நிர்வாகிகள் தொடர்ந்து கூறிவந்தனர்.
கட்சியின் வளர்ச்சிக்கும் எதிர்கால நலனுக்கும் ஒற்றை தலைமையே சரியானதாக இருக்கும் என்கிற கருத்தின் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இதனை தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக வருகிற 23-ந்தேதி நடைபெற உள்ள அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை ஒற்றை தலைமைக்கு முன்நிறுத்தி அவரை தேர்வு செய்யவும் ஆதரவாளர்கள் திட்டமிட்டு காய் நகர்த்தினார்கள்.
அ.தி.மு.க.வில் எழுந்து உள்ள இந்த ஒற்றை தலைமை கோஷம் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வத்துக்கு பிடிக்கவில்லை. தற்போது இருப்பதுபோலவே இரட்டை தலைமை தொடர்வதே கட்சிக்கு நல்லது. ஒற்றை தலைமை குறித்து தன்னிடம் எதுவும் கலந்து ஆலோசிக்காமலேயே பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
இது தொடர்பாக பேட்டி அளித்த ஓ.பன்னீர்செல்வம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் பெயரை குறிப்பிட்டு கருத்து தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், ஒற்றை தலைமை பற்றி ஜெயக்குமார் வெளியில் வந்து பேட்டி அளித்தது ஏன்? என்றும் கேள்வி எழுப்பினார். இது தொடர்பாக பொது வெளியில் பேசியவர்களை எடப்பாடி பழனிசாமி கண்டிக்க வேண்டும் என்றும், அவருடன் பேசுவதற்கு தான் எப்போதும் தயாராகவே இருக்கிறேன் என்றும் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
ஒருங்கிணைப்பாளராகிய என்னிடம் கலந்து பேசாமல் மா.செ.க்கள் கூட்டத்தில் வெளிப்படையாக பேசினர். என்னிடம் சொல்லாமல் இந்த விவாதத்தை தொடங்கி உள்ளனர். மாதவரம் மூர்த்திதான் முதலில் இதை பற்றி பேசினார்.
சட்டசபையில் எடப்பாடி பழனிசாமியின் அரசு நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் வெற்றி பெறுவதற்கு நான்தான் காரணம் என்றும், நான் ஆதரவாளர்களுடன் கட்சியில் சேர்ந்தபோது இரட்டை தலைமை பற்றி திடீரென என்னிடம் கூறினார்கள் என்றும் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
கட்சியின் நலன் கருதி அதற்கு நான் அப்போது ஒத்துக்கொண்டேன் என்று தெரிவித்த ஓ.பன்னீர் செல்வத்திடம், எடப்பாடி பழனிசாமியும் ஒற்றை தலைமை வேண்டாம் என்று தான் நினைக்கிறாரா? என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த ஓ.பன்னீர்செல்வம் அது பற்றி அவர்தான் தெரிவிக்க வேண்டும் என்று கூறினார். ஒற்றை தலைமை விவகாரத்தில் 23-ந்தேதிக்குள் சுமூக முடிவு எட்டப்பட வேண்டும் என்று நான் கடவுளை வேண்டிக் கொண்டிருக்கிறேன் எனவும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த கருத்துக்கள் அ.தி.மு.க. வில் சலசலப்பையும், பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளன.
இந்த நிலையில் சென்னையில் உள்ள இல்லத்தில் ஆதரவாளர்களுடன் 4-வது நாளாக ஓ.பன்னீர் செல்வம் ஆலோசனை நடத்தி வருகிறார். மனோஜ் பாண்டியன், வைத்தியலிங்கம், மைத்ரேயன் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்துகிறார்.
மாவட்ட செயலாளர்களை அணி சேர்ப்பதற்கு ஓ.பன்னீர் செல்வமும், எடப்பாடி பழனிசாமி தரப்பு தனிதனியாக முயற்சிச் செய்து வருகின்றனர். சில மாவட்ட சென்னையில் நாளை மாவட்ட செயலாளர்களை ஓ.பன்னீர் செல்வம் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். இது தொடர்பாக ஓ.பன்னீர் செல்வம் தரப்பு மாவட்ட செயலாளர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அழைப்பு விடுத்து உள்ளனர். பல்வேறு மாவட்ட செயலாளர்கள் ஓ.பன்னீர் செல்வமும்- எடப்பாடி பழன்சாமியும் இரண்டு பேரும் இணைந்து அழைத்தால் தான் வருவோம் என கூறி விட்டனர்.