நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசுக்கு அ.தி.மு.க. அழுத்தம் கொடுக்க வேண்டும்


நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசுக்கு அ.தி.மு.க. அழுத்தம் கொடுக்க வேண்டும்
x

நீட் தேர்வை ரத்து செய்ய மத்தியஅரசுக்கு அ.தி.மு.க. அழுத்தம் கொடுக்க வேண்டும் என தஞ்சையில், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

தஞ்சாவூர்

நீட் தேர்வை ரத்து செய்ய மத்தியஅரசுக்கு அ.தி.மு.க. அழுத்தம் கொடுக்க வேண்டும் என தஞ்சையில், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

அமைச்சர் பேட்டி

தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு நேற்று நீட் தேர்வுக்கு எதிரான உண்ணாவிரத போராட்டத்தை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நீட் தேர்வுக்கு எதிரான இந்த உண்ணாவிரதம் ஒட்டுமொத்த இந்தியாவுக்கான குரலாக ஒலிக்கும். கொரோனா காலத்தில் அனைத்து தொழில்களும் நலிவடைந்த நிலையில், நீட் தேர்வு பயிற்சி மையங்கள் மட்டும் நலிவடையவில்லை. ஒரு லட்சம் கோடி ரூபாய் வருவாயை ஈட்டியுள்ளது. மத்திய அரசு நீட் தேர்வு பயிற்சி மையங்களை வணிகமாக பார்க்கிறது. எங்களுக்கு மாணவர்களின் உயிர் முக்கியம்.

பொருளாதார ரீதியாக பாதிப்பு

பிளஸ்-2 முடித்தவுடனே அடுத்தது எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர வேண்டும் என்று தான் மாணவர்கள் நினைப்பார்கள். 2 அல்லது 3 ஆண்டுகள் நீட் பயிற்சி முடித்தால் தான் மருத்துவத்தில் சேர முடியும் என்ற மன அழுத்தத்தை நாம் தரக்கூடாது. ஏழை, எளிய மாணவர்கள் பொறுத்த வரை கடன் வாங்கி படிக்கின்றனர். அப்படி படிக்கும்போது அந்த முறை தேர்ச்சி பெறவில்லை என்றால் அடுத்த 3 ஆண்டுகளுக்கு அவர்கள் ரூ.3 லட்சம் கட்ட வேண்டிய சூழல் உள்ளது. இது மாணவர்களையும், அவர்களின் ஒட்டுமொத்த குடும்பத்தையும் பாதிக்கிறது.

அரியலூர் மாணவி அனிதா தொடங்கி மாணவர் ஜெகதீஷ், அவரது தந்தை உள்ளிட்ட பலரை நாம் இழந்து உள்ளோம். இதுபோன்ற சூழல் இனிமேல் வரக்கூடாது என்பதற்காக ஒவ்வொரு முறையும் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பப்படுகிறது. ஆனால் கவர்னர், தமிழக மக்களின் உணர்வுகளுக்கும், முரண்பாடான சிந்தனை கொண்டவராக உள்ளார்.

கோரிக்கை

மத்திய அரசுக்கும், அவர்களின் கைப்பாவையாக இருப்பவர்களுக்கும் மனிதாபிமானம் இல்லை. அரசியலைக் கடந்து பொதுநலத்துடன் சிந்தித்துப் பாருங்கள். எதிர்க்கட்சியாக இருந்தாலும், மத்திய அரசாக இருந்தாலும், அமைச்சர் என்ற முறையில் நான் வைக்கும் கோரிக்கை ஒன்றுதான். இது மாணவர்கள் உயிர் சம்பந்தப்பட்ட விஷயம். மன அழுத்தம் தராமல், அவர்கள் கரத்தை வலுப்படுத்தும் விதமாக, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.

சட்டசபையில் தமிழக மக்களின் நலன் கருதி மத்திய அரசை எதிர்த்து தீர்மானம் கொண்டு வரும் பொழுது, அ.தி.மு.க. சட்டசபையில் இல்லாமல் வெளியேறி விடுகிறது. அரசியலை கடந்து பள்ளி மாணவர்களின் உயிர் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நீட் தேர்வை ரத்து செய்ய மத்தியஅரசுக்கு அ.தி.மு.க. அழுத்தம் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

---


Next Story