பெரம்பூர் அதிமுக பகுதி செயலாளர் வெட்டிக்கொலை - சிறுவன் உள்பட 5 பேர் கைது


பெரம்பூர் அதிமுக பகுதி செயலாளர் வெட்டிக்கொலை - சிறுவன் உள்பட 5 பேர் கைது
x

பெரம்பூர் அதிமுக பகுதி செயலாளரை நேற்று இரவு 5 பேர் கொண்ட கும்பல் வெட்டிக்கொன்றது.

சென்னை,

சென்னை வியாசர்பாடி கக்கன் ஜி காலனி ராணி மெய்யம்மை தெருவை சேர்ந்தவர் வியாசை இளங்கோ (வயது 49). இவர் பெரம்பூர் பகுதி அதிமுக செயலாளராக பொறுப்பில் இருந்து வந்தார்.

இவர் நேற்று இரவு கட்சிப்பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தார். முத்துமாரியம்மன் கோவில் தெரு அருகே சென்றபோது இளங்கோவை ஒரு கும்பல் சுற்றி வளைத்தது. யாரும் எதிராராத நேரத்தில் பயங்கர ஆயுதங்களால் இளங்கோவை அந்த கும்பல் சரமாரியாக வெட்டியது. இதில் ரத்த வெள்ளத்தில் இளங்கோவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து செம்பியம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இளங்கோ உடலை மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக புளியந்தோப்பு துணை கமிஷனர் ஈஸ்வரன் உத்தரவின்பேரில் செம்பியம் உதவி கமிஷனர் செம்பேடு பாபு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யப்பன் மற்றும் போலீசார் தப்பி ஓடிய மர்ம கும்பலை தேடி வந்தனர்.

இந்நிலையில், பெரம்பூர் அதிமுக பகுதி செயலாளர் கொலை வழக்கில் 5 பேரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். பெரம்பூர் பகுதியை சேர்ந்த சஞ்சய், கணேசன், வெங்கடேசன், அருண்குமார் மற்றும் ஒரு சிறுவன் என மொத்தம் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த கொலையில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதால் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கஞ்சா போதையில் வீட்டின் அருகே சுற்றித்திரிந்த நபர்களை இளங்கோவன் தட்டிக்கேட்டதாகவும், இதனாலேயே கஞ்சா கும்பல் இளங்கோவனை வெட்டிக்கொன்றதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

பெரம்பூரில் அதிமுக பகுதி செயலாளர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story