அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மீது வழக்கு
மஞ்சூர் அருகே தேயிலை தோட்டத்திற்குள் அத்துமீறி நுழைந்து பொக்லைன் எந்திரம் மூலம் தேயிலை செடிகளை அகற்றிய விவகாரத்தில், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ஊட்டி,
மஞ்சூர் அருகே தேயிலை தோட்டத்திற்குள் அத்துமீறி நுழைந்து பொக்லைன் எந்திரம் மூலம் தேயிலை செடிகளை அகற்றிய விவகாரத்தில், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தேயிலை தோட்டம்
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த மணிக்கல் பகுதியை சேர்ந்தவர் ராஜு (வயது 71). இவருடைய மனைவி பிரேமா. இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இவர்கள் அனைவரும் படித்து முடித்து வெளியூர்களில் பணிபுரிந்து வருகின்றனர். ராஜு நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்க (என்.சி.எம்.எஸ்.) அலுவலகத்தில் கணக்காளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்போது விவசாயம் மேற்கொண்டு வருகிறார்.
ராஜுவுக்கும், அவர்களது உறவினர்களுக்கும் மணிக்கல் மட்டம் பகுதியில் அடுத்தடுத்து தேயிலை தோட்டம் உள்ளது. இந்தநிலையில் ராஜுவின் உறவினர்களிடம் அப்பகுதியில் உள்ள நிலத்தை முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. அமைப்பு செயலாளருமான புத்திசந்திரன் விலைக்கு வாங்கினார். மேலும் தேயிலை தொழிற்சாலை அமைப்பதற்காக ராஜுவிடம் இடத்தை கேட்டு உள்ளார். ஆனால் ராஜு இடம் கொடுக்க சம்மதிக்கவில்லை. இதனால் முன்னாள் அமைச்சர் இடத்தை தருமாறு ராஜுவை மிரட்டியதாக கூறப்படுகிறது.
3 பிரிவுகளில் வழக்கு
இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முன்னாள் அமைச்சர் புத்திசந்திரன் தான் விலைக்கு வாங்கிய இடம் மற்றும் ராஜுவின் இடத்திற்குள் அத்துமீறி நுழைந்து, அங்குள்ள தேயிலை செடிகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றியதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜு இதுகுறித்து மஞ்சூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் ஊட்டி ஊரக போலீஸ் துணை சூப்பிரண்டு விஜயலட்சுமி, இன்ஸ்பெக்டர் கண்மணி, சப்-இன்ஸ்பெக்டர் தனபால் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.
நீலகிரியில் பொக்லைன் எந்திரம் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. விவசாயம் உள்ளிட்ட பணிகளுக்கு குறிப்பிட்ட நேரத்திற்குள் பயன்படுத்த அனுமதி வழங்கப்படுகிறது. இரவு நேரத்தில் பயன்படுத்தக்கூடாது என விதி உள்ளது. இதை மீறி பொக்லைன் எந்திரம் இயக்கப்பட்டதாகவும் புகார் கூறப்பட்டது. இந்த விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் புத்திசந்திரன் மற்றும் பொக்லைன் எந்திர டிரைவர் மீது சேதம் விளைவித்தல், அத்துமீறி நுழைதல், கொலை மிரட்டல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.