எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக ஐகோர்ட்டு தீர்ப்பு: அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்


எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக ஐகோர்ட்டு தீர்ப்பு:  அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
x

எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியதால் சேலத்தில் மாநகர் மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடாஜலம் தலைமையில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

சேலம்

சேலம்,

பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று சென்னை ஐகோர்ட்டு நேற்று தீர்ப்பு அளித்தது. இதையொட்டி சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வெங்கடாஜலம் தலைமையில் அமைப்பு செயலாளர் செம்மலை மற்றும் அ.தி.மு.க.வினர் ஏராளமானவர்கள் நேற்று காலை சேலம் அண்ணா பூங்காவில் உள்ள எம்.ஜி.ஆர். ஜெயலலிதா மணிமண்டபத்தில் உள்ள உருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் அண்ணா பூங்கா முன்பு கூடி பட்டாசு வெடித்து கொண்டாடினர். தொடர்ந்து அங்கிருந்த கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோருக்கு இனிப்பு வழங்கினர். அதேபோன்று அந்த வழியாக வந்த பஸ்சை நிறுத்தி அதில் இருந்த பயணிகளுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

தேர்வு செய்யப்பட்டார்

பின்னர் அமைப்பு செயலாளர் செம்மலை நிருபர்களிடம் கூறுகையில், அ.தி.மு.க.வில் உள்ள 1½ கோடி தொண்டர்களும், ஒற்றை தலைமை தேவை என்ற கருத்தை வலியுறுத்தி உள்ளனர். அதன்படி நடந்த பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். தற்போது அந்த தீர்ப்பு உறுதிபடுத்தப்பட்டு இருக்கிறது. தொண்டர்கள் மூலம் விரைவில் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படுவார் என்றார்.

நிகழ்ச்சியில் பாலசுப்பிரமணியன் எம்.எல்.ஏ., அவைத்தலைவர் பன்னீர்செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சக்திவேல், செல்வராஜ், ரவிச்சந்திரன், முன்னாள் மேயர் சவுண்டப்பன், பொருளாளர் பங்க் வெங்கடாசலம், பொதுக்குழு உறுப்பினர் ராமசந்திரன், பகுதி செயலாளர்கள் யாதவமூர்த்தி, மாரியப்பன், பாலு, சரவணன், முருகன், ஜெயப்பிரகாஷ், இளைஞர், இளம் பெண்கள் பாசறை செயலாளர் சதீஷ்குமார், ஜெயலலிதா பேரவை செயலாளர் சரவணன், தகவல் தொழில் நுட்ப செயலாளர் கனகராஜ், கொண்டலாம்பட்டி முன்னாள் மண்டலக்குழு தலைவர் மோகன், நகர கூட்டுறவு வங்கி தலைவர் வேபிரிட்ஜ் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story