அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளதை தொடர்ந்து நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அ.தி.மு.கவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
கொண்டாட்டம்
கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ந் தேதி நடந்த அ.தி.மு.க பொதுக்குழு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வந்தது,
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் ஜூலை 11-ந் தேதி நடந்த அ.தி.மு.க பொதுக்குழு மற்றும் அதன் முடிவுகள் செல்லும் என்று தீர்ப்பு வழங்கினர்.
இதனை தொடர்ந்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் அறிவுறுத்தலின் பேரில், மாநில அமைப்புசாரா ஓட்டுனர் அணி இணை செயலாளர் பெருமாள் சாமி தலைமையில் தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க. அலுவலகம் மற்றும் பழைய மாநகராட்சி அலுவலகம் அருகே பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர் உருவச்சிலைக்க பாலாபிஷேகம் செய்து, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் சந்தனம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோன்று நாசரேத் காமராஜர் பஸ்நிலையம் மற்றும் கே.வி.கே.சாமி சிலை அருகிலும் கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
கோவில்பட்டி
மேலும், முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. ஏற்பாட்டில், கோவில்பட்டி எம்.எல்.ஏ. அலுவலகம் முன்பும், பயணிகள் விடுதி முன்பும் அ.தி.மு.க. நகர செயலாளர் விஜயபாண்டியன் தலைமையில் பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் துணை தலைவர் பழனிச்சாமி உள்ளிட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.