அ.தி.மு.க.வை துரும்பு அளவு விமர்சித்தால் தூண் அளவுக்கு பதிலடி ; தனித்து போட்டியிட தயார்.- செல்லூர் ராஜூ ஆவேசம்


அ.தி.மு.க.வை துரும்பு அளவு விமர்சித்தால் தூண் அளவுக்கு பதிலடி ; தனித்து போட்டியிட  தயார்.- செல்லூர் ராஜூ ஆவேசம்
x
தினத்தந்தி 4 Jun 2022 1:02 PM IST (Updated: 4 Jun 2022 1:19 PM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க.வை பா.ஜ.க. துரும்பு அளவு விமர்சித்தால், தூண் அளவுக்கு பதிலடி தருவோம் என அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

சென்னை

பாராளுமன்ற தேர்தலை பொறுத்தவரையில் மத்தியில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் களம் இறங்கும் தேசிய கட்சிகளான பா.ஜனதாவும், காங்கிரசும் தமிழகத்தில் மாநில கட்சிகளுடன் கூட்டணி அமைத்தே தேர்தலை சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை கூட்டணி விவகாரத்தில் டெல்லி பா.ஜனதா தலைவர்கள் அ.தி.மு.க. தலைமை எடுக்கும் முடிவை ஏற்றுக்கொள்ளும் மனநிலையிலேயே இருந்தார்கள்.

ஏனெனில் தான் விரும்பிய உடன்பாட்டுக்கு சம்மதிக்காவிட்டால் தனித்து தேர்தல் களத்தை சந்திக்கும் ஆற்றல் அவரிடம் இருந்தது. அதற்கு உதாரணம் 2014-ல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல்.

பிரதமர் மோடி நல்ல நண்பராக இருந்தும் கூட்டணி உடன்பாடு ஏற்படாததால் ஜெயலலிதா தனித்து தேர்தலை சந்தித்தார். 'மோடியா? இந்த லேடியா?' என்று நேருக்கு நேர் சவால் விட்டார். அதில் இமாலய வெற்றி பெற்று சாதித்தார். அதாவது 37 தொகுதிகளில் வெற்றி பெற்றார்.

ஆனால் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. தலைமையால் உறுதியான முடிவுகளை எடுக்க முடியவில்லை. கூட்டணி விசயத்தில் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டிய நிலைக்கும், சமரசம் செய்து கொள்ள வேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டார்கள்.

2019 பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு படுதோல்வியைத் தான் சந்தித்தார்கள். ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே அ.தி.மு.க. வெற்றி பெற்றது. பா.ஜனதா ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை.

அதை தொடர்ந்து நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் இந்த கூட்டணி வெற்றி கூட்டணியாக அமையவில்லை. அ.தி.மு.க. 66 இடங்களை பெற்று எதிர்க்கட்சியாக மாறியது.

ஆனால் பா.ஜனதா முதல் முறையாக 4 தொகுதிகளில் வெற்றி பெற்று தமிழகத்தில் தனது வெற்றி கணக்கை தொடங்கியது.

அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி தொடர்ந்தாலும் இணக்கமான மனநிலையில் இல்லை என்பதே உண்மை. தலைவர்கள் சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப ஒத்துப்போனாலும் கீழ் மட்டத்தில் இருக்கும் தொண்டர்கள் பா.ஜனதா கூட்டணியில் இருப்பதால் தான் வெற்றி பெற முடியவில்லை என்று வெளிப்படையாகவே பேசுகிறார்கள்.

சமீபத்தில் முன்னாள் அமைச்சர் சி.பொன்னையன் பேசும் போது

தமிழகத்தில் ஆளுங்கட்சிக்கு அடுத்தபடியாக அதிக இடங்களை பிடித்து பிரதான எதிர்க்கட்சியாக அ.தி.மு.க. செயல்படுகிறது. ஆனால் ஏதோ ஒரு நூறு பேரை, ஆயிரம் பேரை கூட்டி ஒரு போராட்டத்தை நடத்துவதால் மட்டும் ஒரு கட்சி (பா.ஜ.க.) பிரதான எதிர்க்கட்சியாக மாறவும் முடியாது, வளரவும் முடியாது.

எதிர்க்கட்சி என்ற நிலையை மக்கள் மத்தியில் பெறவேண்டும் என்றால் போராடினால் மட்டும் போதாது, கொள்கைகள் இருக்க வேண்டும். தமிழகத்தில் எல்லோரும் இந்தியை, சமஸ்கிருதத்தை படிக்க வேண்டும் என்ற வலியுறுத்தலை மத்திய அரசு சட்டரீதியாக மேற்கொள்ளும்போது, அதை மக்கள் நிச்சயம் ஏற்கமாட்டார்கள்.

இதற்கு உதாரணம் நீட் தேர்வு. சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின்படி நடத்தப்படும் இத்தேர்வில், நமது மாணவர்கள் சிரமப்படுகிறார்கள். இதனால் வடமாநிலத்தவர்கள் தமிழகம் வந்து நீட் தேர்வுக்கு படித்து, அதில் வெற்றியும்பெற்று, தமிழக மாணவர்களின் வாய்ப்பை தட்டிப்பறிக்க வழிவகை செய்துவிட்டது மத்திய அரசு. இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம் என கூறி இருந்தார்.

பா.ஜ.க. குறித்து அ.தி.மு.க. மூத்த தலைவர் பொன்னையன் பேசியதை அவரது சொந்த கருத்தாக எடுத்துக் கொள்ள வேண்டும் என அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.

இந்த நிலையில் இன்று மதுரையில் பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ

அ.தி.மு.க.வை பாஜக துரும்பு அளவு விமர்சித்தால் தூண் அளவுக்கு பதிலடி தருவோம் என கூறினார்.

அ.தி.மு.க.வை பா.ஜ.க. துரும்பு அளவு விமர்சித்தால், தூண் அளவுக்கு பதிலடி தருவோம் என பாஜக மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி அ.தி.மு.க.வை விமர்சித்ததை சுட்டிக்காட்டி செல்லூர் ராஜு பேசினார்.

மேலும் அவர் மத்திய அரசில்பதவி பெறுவதற்காக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை அரசியல் செய்வதாக கூறினார்.

ஏற்கனவே தமிழ்நாடு பா.ஜ.க. தலைவராக இருந்த தமிழிசை, எல்.முருகன் ஆகியோர் அரசு பதவி பெற்றதை சுட்டிக்காட்டி செல்லூர் ராஜு பேட்டி அளித்தார்.

தமிழ்நாட்டில் அ.தி.மு.க.தான் எதிர்க்கட்சி யாருடனும் கூட்டணி இல்லை, தனித்தே போட்டி என சொல்ல அ.தி.மு.க. தயார். மற்ற கட்சியினர் தயாரா? என கேள்வி எழுப்பினார்.

நாங்கள் காக்கா கூட்டம் இல்லை கொள்கை கூட்டம். இரைகளை போட்டால் காக்கைகள் கூடத்தான் செய்யும். இரைகள் முடிந்துவிட்டல் பறந்து விடும்.என கூறினார்.


நாங்கள் காக்கா கூட்டம் இல்லை கொள்கை கூட்டம். இரைகளை போட்டால் காக்கைகள் கூடத்தான் செய்யும். இரைகள் முடிந்துவிட்டல் பறந்து விடும்.


Next Story