மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மின் கட்டண உயர்வை கண்டித்தும், கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும், தி.மு.க. அரசை கண்டித்தும் புதுக்கோட்டை பழைய பஸ் நிலையம் அருகே வடக்கு, தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், வடக்கு மாவட்ட செயலாளருமான டாக்டர் சி.விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ''தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள், மருத்துவக்கல்லூரிகளில் மருந்து, மாத்திரைகள் தட்டுப்பாடு அதிகமாக உள்ளது. இதனை போக்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் பிரசாரத்தின் போது ஆட்சிக்கு வந்தால் 'நீட்' தேர்வு ரத்து செய்யப்படும் என தி.மு.க. வாக்குறுதி அளித்தது. ஆனால் ஆட்சி பொறுப்பேற்ற பின் 2 'நீட்' தேர்வு நடைபெற்று விட்டது'' என்றார். முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் தெற்கு மாவட்ட செயலாளர் வைரமுத்து உள்பட நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. உள்பட 1,000-க்கும் மேற்பட்டோர் மீது டவுன் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.