நாகர்கோவிலில் மின் கட்டணம், சொத்துவரி உயர்வை கண்டித்து அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்;தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது


நாகர்கோவிலில் மின் கட்டணம், சொத்துவரி உயர்வை கண்டித்து அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்;தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது
x

மின்கட்டணம், சொத்து வரி உயர்வை கண்டித்து நாகர்கோவிலில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

மின்கட்டணம், சொத்து வரி உயர்வை கண்டித்து நாகர்கோவிலில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் மின் கட்டணம் மற்றும் சொத்து வரி உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு, சட்ட ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்டவற்றிற்கு காரணமான தி.மு.க. அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒருபகுதியாக குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த போராட்டத்திற்கு தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாநில அமைப்பு செயலாளர் பச்சைமால், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் கிருஷ்ணதாஸ், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் சிவ செல்வராஜன், வக்கீல் பிரிவு இணைச் செயலாளர் பரமேஸ்வரன், பகுதி செயலாளர்கள் ஜெய கோபால், முருகேஸ்வரன், ஜெவின் விசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. பேச்சு

ஆர்ப்பாட்டத்தில் மின் கட்டண உயர்வை திரும்ப பெறக் கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன. அப்போது தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

தமிழகம் முழுவதும் மின் கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வால் ஏழை, எளிய மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற ஓராண்டில் மக்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள். தி.மு.க. தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்தி உள்ளது. இதேபோல் கட்டுமான பொருட்களின் விலையும் தற்போது கடுமையான அளவு உயர்ந்துள்ளது. சொத்து வரியை பொருத்தமட்டில் 100 சதவீதம் வரி உயர்த்தப்பட்டுள்ளது. சோதனைகளை சாதனைகளாக்கிக் காட்டியவர் தான் ஜெயலலிதா. அதேபோல் தற்பொழுது எடப்பாடி பழனிசாமி சோதனைகளை சாதனையாக்கி வருகிறார். 2024-ம் ஆண்டுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிர்வாகிகள்

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட இணை செயலாளர் சாந்தினி பகவதியப்பன், ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவர் முத்துக்குமார், முன்னாள் எம்‌.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மெர்லியன்ட்தாஸ், அவைத்தலைவர் சேவியர் மனோகரன், ஜெயசந்துரு என்ற சந்துரு, பொருளாளர் திலக், அணி செயலாளர்கள் மனோகரன், சுகுமாரன், ஒன்றிய செயலாளர் பொன் சுந்தர்நாத், மாநகராட்சி கவுன்சிலர்கள் ஸ்ரீலிஜா, அக் ஷயா கண்ணன், பேராசிரியர் நீலபெருமாள், நிர்வாகிகள் ஆறுமுகம், சகாயராஜ், மணிகண்டன், குளச்சல் நகர அ.தி.மு.க. செயலாளர் ஆண்ட்ரோஸ், நிர்வாகி ஆறுமுகராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story