அ.தி.மு.க. கவுன்சிலர் படுகொலை
மோட்டார்சைக்கிளில் சென்ற அ.தி.மு.க. கவுன்சிலரை நடுரோட்டில் கும்பல் வழிமறித்து சரமாரியாக வெட்டிக்கொலை செய்தது.
மதுரை,
திண்டுக்கல் மாவட்டம் மாவுத்தன்பட்டி கிராமத்தை சேர்ந்த சந்திரபாண்டியன் (வயது 45). இவர் அம்மையநாயக்கனூர் (கொடைரோடு) பேரூராட்சி அ.தி.மு.க. கவுன்சிலராக இருந்து வந்தார்.
சந்திரபாண்டியன், தனது மகளை மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள லிங்கவாடியில் திருமணம் செய்து கொடுத்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று சந்திரபாண்டியன் தனது மகள் வீட்டிற்கு சென்றுவிட்டு மீண்டும் ஊருக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி கொண்டிருந்தார்.
சரமாரி வெட்டிக்கொலை
பாலமேடு அருகே மாணிக்கம்பட்டி செல்லும் சாலையில் சென்றபோது, அவரை வேறு மோட்டார் சைக்கிள்களில் வந்த ஒரு கும்பல் திடீரென வழிமறித்தது.
இதைபார்த்ததும் விபரீதம் நடக்க உள்ளதாக உணர்ந்த சந்திரபாண்டியன் சுதாரித்துக்கொண்டு தப்பிச் செல்வதற்குள் அந்த கும்பல் அவரை சரமாரியாக நடுரோட்டில் வெட்டியது. இதில் சந்திரபாண்டியன், தனது மோட்டார் சைக்கிளோடு நடுரோட்டில் விழுந்து ரத்த வெள்ளத்தில் இறந்தார். இதையடுத்து அந்த கும்பலை சேர்ந்தவர்கள், அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
காரணம் என்ன?
இதுகுறித்து தகவல் அறிந்ததும் பாலமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சந்திரபாண்டியனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி, கொலையாளிகளை தேடிவருகின்றனர். பட்டப்பகலில் அ.தி.மு.க. கவுன்சிலர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.