அ.தி.மு.க. கவுன்சிலர் தர்ணா போராட்டம்


அ.தி.மு.க. கவுன்சிலர் தர்ணா போராட்டம்
x

ஓமலூர் ஒன்றியக்குழு கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

சேலம்

ஓமலூர்:-

ஓமலூர் ஒன்றியக்குழு கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

ஒன்றியக்குழு கூட்டம்

ஓமலூர் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு ஒன்றியக்குழு தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். ஒன்றிய ஆணையாளர் சுந்தர், வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி குணசேகரன், ஒன்றியக்குழு துணைத்தலைவர் செல்வி ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டம் தொடங்கியதும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தின் கீழ் ஒன்றிய பொது நிதி பங்கு தொகையாக ரூ.16.36 லட்சம் வழங்க தீர்மானம் கொண்டுவரப்பட்டது/ இதற்கு தி.மு.க. கவுன்சிலர் குப்புசாமி ஒன்றிய பொது நிதியிலிருந்து தேசிய ஊரக வேலை திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தார்.

வட்டார வளர்ச்சி அலுவலர் குணசேகரன் பதில் அளிக்கையில், மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் தான் பணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதனை நிறுத்த முடியாது என்றார்.

தர்ணா போராட்டம்

அ.தி.மு.க. கவுன்சிலர் சரவணன் கூறுகையில், புளியம்பட்டி பகுதியில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் போது சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.7 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து அங்கன்வாடி மையம் கட்டிடம் கட்டப்பட்டது பணி முடிந்து 7 மாதம் ஆகியும் அந்த கட்டிடத்தை திறக்கவில்லை. தற்போது வாடகை கட்டிடத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. அந்த கட்டிடமும் பழுதாகி மேற்கூரை விழும் நிலையில் உள்ளதால் அங்கன்வாடி மையத்திற்கு பெற்றோர்கள் குழந்தைகளை அனுப்புவதில்லை. எனவே அங்கன்வாடி மைய புதிய கட்டிடத்தை திறக்க வேண்டும் என்றார். இந்த கோரிக்கையை வலியுறுத்தி அவர் திடீரென்று தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

ஒன்றியக்குழு தலைவர் ராஜேந்திரன், வளர்ச்சி அலுவலர் குணசேகரன் ஆகியோர் 2 நாட்களில் அங்கன்வாடி மையத்தை திறக்க நடவடிக்கை எடுப்பதாக கூறியதின் பேரில் தர்ணா போராட்டத்தை அவர் கைவிட்டார்.

தீர்மானங்கள்

முத்துநாயக்கன்பட்டி ஊராட்சியில் தொடர் மழை காரணமாக கால்வாய்கள் நிரம்பி பள்ளி மற்றும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து விட்டது. எனவே முத்துநாயக்கன்பட்டி முதல் நைனாத்தால் ஏரி வரை உள்ள கால்வாயை தூர்வாரும் பணியை ஒன்றிய பொது நிதியில் மேற்கொள்வது என்பது உள்பட அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.


Next Story