அ.தி.மு.க. கூட்டத்துக்கு செல்ல வேண்டியவர்களை தி.மு.க.வினர் அடைத்து வைத்தனரா?;போலீசாருடன் அ.தி.மு.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
ஈரோட்டில் அ.தி.மு.க. கூட்டத்துக்கு செல்ல வேண்டியவர்களை தி.மு.க.வினர் அடைத்து வைத்ததாக வந்த தகவலால் போலீசாருடன் அ.தி.மு.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோட்டில் அ.தி.மு.க. கூட்டத்துக்கு செல்ல வேண்டியவர்களை தி.மு.க.வினர் அடைத்து வைத்ததாக வந்த தகவலால் போலீசாருடன் அ.தி.மு.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வேட்பாளர் அறிமுக கூட்டம்
ஈரோடு கருங்கல்பாளையம் அருகே உள்ள கிருஷ்ணம்பாளையம் பகுதியில் தி.மு.க. தேர்தல் பிரசார நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். மதியத்துக்கு மேல் ஆகியும் நிகழ்ச்சி தொடங்கவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் அங்கு காத்திருந்த பொதுமக்களுக்கு தி.மு.க. நிர்வாகிகள் பிரியாணி உணவு, தண்ணீர் உள்ளிட்டவை வழங்கினார்கள். ஆனால் யாரையும் அங்கிருந்து செல்லவிடவில்லை என்று தெரிகிறது.
இதனால் பெண்கள் மிகவும் சிரமப்பட்டனர். இந்த நிலையில் நேற்று மாலை முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளும் அ.தி.மு.க. வேட்பாளர் அறிமுக கூட்டம் ஈரோடு பெருந்துறை ரோடு வேப்பம்பாளையத்தில் நடந்தது.
இதில் கலந்து கொள்வதற்காக பலரும் ஆர்வமாக இருந்தனர். அவர்களை அழைத்து செல்ல அ.தி.மு.க.வினர் வாகனங்களுடன் சம்பந்தப்பட்ட இடத்துக்கு வந்தனர். ஆனால் அவர்களுடன் செல்ல பொதுமக்கள் யாரும் வரவில்லை.
பரபரப்பு
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுபற்றி விசாரித்தபோது மக்கள் அனைவரும் தி.மு.க. நிகழ்ச்சிக்காக ஒரே இடத்தில் தங்க வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதனால் விரைந்து சென்ற அ.தி.மு.க.வினர் பொதுமக்களை எங்கள் நிகழ்ச்சிக்கு வரவிடாமல் அடைத்து வைக்கிறீர்களா என்று தி.மு.க.வினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
போலீசார் மற்றும் நிருபர்கள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து வந்தனர். அதைத்தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
இதுகுறித்து அ.தி.மு.க.வினர் கூறும்போது, 'முன்னாள் முதல் -அமைச்சரின் கூட்டத்துக்கு பொதுமக்கள் கூடிவிடக்கூடாது என்று தி.மு.க.வினர் திட்டமிட்டு போலீசார் உதவியுடன் பொதுமக்களை அடைத்து வைத்துள்ளனர்' என்று குற்றம் சாட்டினர்.