அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது சசிகலா கருத்து
அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்று சசிகலா கூறினார்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் திருமண விழா நடந்தது. இதில் வி.கே.சசிகலா கலந்துகொண்டு திருமணத்தை நடத்தி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருவரும் தொண்டர்களை மதிக்கக்கூடியவர்கள். தற்போது அ.தி.மு.க.வில் தொண்டர்களின் விருப்பத்திற்கு மாறான நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. பணபலம், படைபலம் கொண்டு பதவியை பிடிக்க நினைப்போரை நிராகரிக்கும் காலம் வந்துவிட்டது. அ.தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.
செல்லாது
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நான் தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போது பொதுச்செயலாளர் தேர்வு கூட்டம் நடத்தியதே தவறானது. எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளரானதே கேள்விக்குறியாக இருக்கும்போது ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கியது எப்படி செல்லும்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது.
என்னை நாடி ஓ.பன்னீர்செல்வம் வந்தால் அதைப்பற்றி காலம், சூழ்நிலைக்கு ஏற்பதான் முடிவு எடுக்க முடியும். ஒட்டுமொத்த தொண்டர்களின் குரல்தான் இறுதியானது. அதுதான் வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.