அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்
அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடிபழனிசாமிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ளது. இது பற்றிய அறிவிப்பு தேர்தல் ஆணைய இணையதளத்தில் அதிகாரபூர்வமாக பதிவேற்றப்பட்டு உள்ளது.
சென்னை,
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. இரட்டை தலைமையில் செயல்பட்டு வந்தது. இதையடுத்து ஒற்றை தலைமை என்ற கோஷம் ஒலிக்க தொடங்கிய பிறகு எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் இடையே மோதல் வெடித்தது.
குறிப்பாக கடந்த ஆண்டு சென்னை வானகரத்தில் நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். ஓ.பன்னீர்செல்வம் அதிரடியாக நீக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் வழக்கு தொடர்ந்தார். ஆனால் அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்று ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
இது ஓ.பன்னீர்செல்வத்துக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்தது. பின்னர் அடுத்து நடைபெற்ற அ.தி.மு.க. உள்கட்சி தேர்தலில் கட்சியின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வானார். இது அக்கட்சி பொதுக்குழுவிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.
பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி
அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி, தான் தேர்ந்தெடுக்கப்பட்டது தொடர்பாகவும், இதுகுறித்த கட்சியின் சட்ட விதிகள் திருத்தங்களையும் அங்கீகரிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் உரிய ஆவணங்களை சமர்ப்பித்திருந்தார்.
ஆனாலும் இந்த விஷயத்தில் தேர்தல் ஆணையம் எந்த முடிவும் எடுக்காமல் இருந்தது. இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி கோர்ட்டை நாட, ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் தேர்தல் ஆணையத்தில் மனு ஒன்றை சமர்ப்பித்து பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்க கூடாது என்று மல்லுக்கு நின்றது.
இந்த நிலையில் டெல்லி கோர்ட்டில் வழக்கு நடந்து கொண்டிருந்த சூழலில், அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என்றும், அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் செல்லும் என்றும் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
தேர்தல் ஆணையம் அங்கீகாரம்
இதன்படி பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்தது செல்லும் என்று தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தாக்கல் செய்த ஆவணங்கள் அனைத்தையும் தேர்தல் கமிஷன் இப்போது இணைய தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.
அதில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்றும், அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், துணை பொதுச்செயலாளர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் என்றும், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
குறிப்பாக எடப்பாடி பழனிசாமியால் நியமிக்கப்பட்ட முதன்மை நிர்வாகிகள் மற்றும் 69 மாவட்ட செயலாளர்கள், 79 அமைப்பு செயலாளர்கள் அனைவருக்கும் அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.
இதுகுறித்து அ.தி.மு.க. வக்கீலும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான இன்பதுரை கூறியதாவது:-
நீதிக்கு கிடைத்த வெற்றி
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.தான் உண்மையான அ.தி.மு.க. என்று நீண்ட நெடிய சட்டப்போராட்டம் நடத்தினோம். கட்சியின் பொதுக்குழுதான் உயர்ந்த அதிகாரம் கொண்டது. அந்த வகையில் அதிகமான பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்குதான் உள்ளது. அவர் பொதுச்செயலாளராக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார் என்று தேர்தல் கமிஷனில் ஆவணங்களை சமர்ப்பித்திருந்தோம்.
இதில் எங்களுக்கு அடுத்தடுத்து வெற்றி கிடைத்த நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்து தேர்தல் கமிஷன் இப்போது தனது இணையதளத்திலும் பதிவேற்றம் செய்துள்ளது. இதன்மூலம் சட்டம் ஜெயித்துள்ளது. நீதி நியாயம்தான் வென்றுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அ.தி.மு.க.வினர் கொண்டாட்டம்
அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ளது குறித்து அ.தி.மு.க.வினர் மகிழ்ச்சியில் திளைத்து வருகின்றனர்.
சென்னை தியாகராய நகரில் எடப்பாடி பழனிசாமியின் தீவிர ஆதரவாளரும், எம்.ஜி.ஆர் இளைஞர் அணி இணை செயலாளருமான டாக்டர் வி.சுனில் தலைமையில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். பொதுமக்களுக்கு இனிப்புகளும் வழங்கினர். இப்படி பல இடங்களில் அ.தி.மு.க.வினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் முழுமையாக ஏற்றுக்கொண்டது ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் ஓ.பன்னீர்செல்வத்துக்கு மேலும் பின்னடைவையே ஏற்படுத்தி இருக்கிறது.