சுங்கச்சாவடி ஊழியர்களின் போராட்டத்திற்கு அ.தி.மு.க. ஆதரவு
சுங்கச்சாவடி ஊழியர்களின் போராட்டத்திற்கு அ.தி.மு.க. ஆதரவு அளித்துள்ளது.
திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, திருமாந்துறை சுங்கச்சாவடியில் பணியாற்றிய 28 ஊழியர்களை பணி நீக்கம் செய்த ஒப்பந்த தனியார் நிறுவனத்தை கண்டித்தும், பணி நீக்கம் செய்த ஊழியர்களை மீண்டும் பணியமர்த்த கோரியும் அந்த ஊழியர்களும், சுங்கச்சாவடியில் பணிபுரியும் ஊழியர்களும் கடந்த மாதம் 1-ந் தேதி முதல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 31-வது நாளாக தொடர்ந்து நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு நேற்று பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க.வினர் கட்சியின் அவைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான வரகூர் அருணாசலம் தலைமையில் நேரில் சென்று ஊழியர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்து, ஊழியர்களிடம் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தனர். அப்போது கட்சியின் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் எம்.என்.ராஜாராம் உள்ளிட்ட கட்சியினர் உடனிருந்தனர்.
இதையடுத்து தமிழ்நாடு சுங்கச்சாவடி பணியாளர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் கட்சியினரிடம் ஒரு மனு அளிக்கப்பட்டது. அதில், பணி நீக்கம் செய்யப்பட்ட சுங்கச்சாவடி ஊழியர்களை மீண்டும் பணியமர்த்தவும், தமிழகத்தில் இயங்கக்கூடிய சுங்கச்சாவடிகளில் பணிபுரிய தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்கவும் மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க முன்னாள் முதல்-அமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்த வேண்டும், என்று கூறியிருந்தனர். அதனை தொடர்ந்து அ.தி.மு.க.வினர் சுங்கச்சாவடி ஊழியர்களின் போராட்டம் தொடர்பாக பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.