அ.தி.மு.க. முன்னாள் எம்.பி.யான டாக்டர் மைத்ரேயன் பா.ஜ.க.வில் இணைந்தார்
அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. டாக்டர் மைத்ரேயன் பா.ஜ.க.வில் இணைந்தார்.
சென்னை,
சென்னையை சேர்ந்த பிரபல புற்றுநோய் சிகிச்சை நிபுணரான டாக்டர் வி.மைத்ரேயன் கடந்த 1991-ம் ஆண்டு பா.ஜ.க.வில் இணைந்தார். தொடர்ந்து 1999-ம் ஆண்டு வரை அக்கட்சியில் பயணித்தார். இதையடுத்து, மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் தலைமையை ஏற்று மைத்ரேயன் அ.தி.மு.க.வில் இணைந்தார்.
2002-ம் ஆண்டு அ.தி.மு.க. சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். தொடர்ச்சியாக 3 முறை எம்.பி.யாக இருந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வில் உட்கட்சி மோதல் ஏற்பட்டது. ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்ததற்காக மைத்ரேயன் கட்சியில் இருந்து நீக்கிவைக்கப்பட்டார். இதையடுத்து அவர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளராக இருந்து வந்தார்.
பா.ஜ.க.வில் இணைந்தார்
இந்த நிலையில் டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் அருண்சிங், தேசிய செயலாளர் சி.டி.ரவி, செய்தித்தொடர்பாளர் ஜாபர் இஸ்லாம் ஆகியோர் முன்னிலையில் நேற்று மைத்ரேயன் பா.ஜ.க.வில் இணைந்தார். அவருக்கு பா.ஜ.க. உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது. இதையடுத்து, பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, அமைப்பு பொதுச்செயலாளர் சந்தோஷ் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இதுகுறித்து மைத்ரேயன் கூறியதாவது:-
தாமரை மலரும்
23 ஆண்டுகளுக்கு பிறகு நான் பா.ஜ.க.வுக்கு திரும்பி இருக்கிறேன். பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் ஜே.பி.நட்டா ஆகியோரின் ஓய்வில்லா உழைப்பினால் பா.ஜ.க. இப்போது சிறப்பான இடத்தை பெற்றிருக்கிறது. தொடர்ச்சியாக பல்வேறு இலக்குகளையும் அடைந்திருக்கிறது.
2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும், தமிழகத்தில் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலிலும் தாமரை மலரும்.
இவ்வாறு அவர் கூறினார்.