ராசிபுரத்தில் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்யக்கோரி ராசிபுரத்தில் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ராசிபுரம்
அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் ஊழல் முறைகேடுகள் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் ஆகியவற்றை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க. அரசை கண்டித்தும், அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய கோரியும் நாமக்கல் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ராசிபுரம் புதிய பஸ் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் கந்தசாமி தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சரும், மாநில மகளிர் அணி இணைச் செயலாளருமான டாக்டர் சரோஜா வரவேற்றார். இதில் சிறப்பு விருந்தினராக நாமக்கல் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி எம்.எல்.ஏ. பேசியதாவது:-
உச்சநீதிமன்ற உத்தரவின்படி அமலாக்கத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தது. செந்தில்பாலாஜிக்கு அவசர அவசரமாக இருதய ஆபரேஷன் செய்ததில் சந்தேகம் உள்ளது. ஆஸ்பத்திரியில் உள்ள செந்தில் பாலாஜியை முதல்-அமைச்சரும், அவரது மகன் உதயநிதியும், அவரது குடும்பத்தாரும் போய் பார்க்க வேண்டிய அவசியம் என்ன? அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதால் தி.மு.க.வுக்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளது.
பதவி நீக்கம்
செந்தில் பாலாஜி ஊழல் செய்தது நிரூபணம் ஆனதால் முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கினார். இதேபோல் முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதி, என்.கே.பி.ராஜா அமைச்சராக இருந்தபோது தவறு செய்ததால் அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கினார். எனவே அவரது தந்தை வழியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
இன்றைக்கு தி.மு.க.வினரே தி.மு.க. அரசை குறை சொல்ல கூடிய நிலையை பார்க்க முடிகிறது. கடந்த 2 ஆண்டுகளாக தமிழகத்தில் இருண்ட ஆட்சி தான் நடந்து வருகிறது. ஆசிரியர்கள், அரசுத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் உள்பட அனைத்து தரப்பினரும் தி.மு.க. அரசு மீது வெறுப்பு அடைந்துள்ளனர். எப்போது எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி அமையும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
அ.தி.மு.க. வெற்றி
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 40-க்கு 40-ம் அ.தி.மு.க. வெற்றி பெறும். மக்கள் மன்றம் நல்ல தீர்ப்பை வழங்கும். நாமக்கல் மாவட்டத்தில் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் நான்கு வழிச்சாலை, அரசு மருத்துவக் கல்லூரி உள்பட பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் சேகர் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பாஸ்கர், கலாவதி, மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் சந்திரசேகர், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் கே.பி.எஸ்.சுரேஷ்குமார், மாவட்ட மகளிரணி செயலாளர் வைரம் தமிழரசி, ராசிபுரம் நகர செயலாளர் பாலசுப்பிரமணியன், ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர்கள் இ.கே.பொன்னுசாமி, வக்கீல் தாமோதரன், வேம்புசேகரன், கே.பி.எஸ்.சரவணன், ராஜா, ஆடிட்டர் நலாலியப்பன், தொப்பப்பட்டி ஊராட்சி அ.தி.மு.க. செயலாளர் வக்கீல் ஏ.பூபதி, உள்பட நகர, ஒன்றிய, பேரூராட்சி நிர்வாகிகள், உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு சங்க நிர்வாகிகள், சார்பு மன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தி.மு.க. அரசை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர். முடிவில் ராசிபுரம் நகர செயலாளர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.