அ.தி.மு.க. செயல்பாடு பற்றி தேர்தல் கமிஷனுக்கு தகவல்: சத்யபிரத சாகு அனுப்பினார்
அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்பதற்காக அளிக்கப்பட்ட அழைப்பு கடிதத்தை அ.தி.மு.க. 2 முறை நிராகரித்தது குறித்து இந்திய தேர்தல் கமிஷனுக்கு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தகவல் அனுப்பியுள்ளார்.
சென்னை,
இந்தியாவில் சொந்த தொகுதிக்கு வெளியே இருந்தாலும் வாக்காளர்கள் அங்கிருந்தபடியே வாக்களிக்க வசதியாக 'ஆர்.வி.எம்.' என்ற புதிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை தேர்தல் கமிஷன் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. இதுதொடர்பாக டெல்லியில் வருகிற 16-ந் தேதி அனைத்து கட்சி கூட்டத்தை நடத்தி, கட்சிகளின் ஆலோசனைகளை பெற இந்திய தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.
இதில் பங்கேற்க ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள தேசிய, மாநில கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கும்படி மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளை இந்திய தேர்தல் கமிஷன் அறிவுறுத்தி இருந்தது.
நிராகரிப்பு
இதனையடுத்து கூட்டத்தில் பங்கேற்கும்படி அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளுக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அழைப்பு கடிதம் அனுப்பினார்.
அந்த வகையில் அ.தி.மு.க.வுக்கும் அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டது. அந்த கட்சி தற்போது எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியாகவும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மற்றொரு அணியாகவும் இரண்டாக பிளவுபட்டு உள்ளது. தேர்தல் கமிஷன் அளித்த அந்த அழைப்பு கடிதம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது.
அந்த கடிதத்தில், 'அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்' என்ற பதவிகள் குறிப்பிடப்பட்டு இருந்தன. ஆனால் அப்படிப்பட்ட பதவிகள் எதுவும் கட்சியில் இல்லை என்று கூறி, கடிதத்தை நிராகரித்து, அ.தி.மு.க. திருப்பி அனுப்பிவிட்டது.
ஆனால், இந்திய தேர்தல் கமிஷனிடம் உள்ள தகவல்கள் அடிப்படையில்தான் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிடப்பட்டு கடிதம் அனுப்பப்பட்டது என்று சத்யபிரத சாகு தெரிவித்தார்.
தேர்தல் கமிஷனுக்கு தகவல்
இந்த நிலையில் மீண்டும் அ.தி.மு.க.விற்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பெயர்களில் அழைப்பு கடிதத்தை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அனுப்பி இருந்தார்.
இந்த 2-வது கடிதத்தையும் வாங்காமல் அ.தி.மு.க .தலைமைக்கழக நிர்வாகிகள் நிராகரித்து விட்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே அ.தி.மு.க.வுக்கு அனுப்பிய அழைப்பு கடிதங்கள், அதை அந்த கட்சி நிராகரித்தது குறித்து விளக்கமாக இந்திய தேர்தல் கமிஷனுக்கு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு நேற்று 'இமெயில்' மூலம் தகவல் தெரிவித்து கடிதம் எழுதி உள்ளார்.