அ.தி.மு.க. அரசு தான் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பாக இருக்கும்;அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் பேட்டி


அ.தி.மு.க. அரசு தான் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பாக இருக்கும்;அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் பேட்டி
x

அ.தி.மு.க. அரசு தான் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பாக இருக்கும் என்று கட்சியின் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் கூறினார்.

ஈரோடு

அ.தி.மு.க. அரசு தான் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பாக இருக்கும் என்று கட்சியின் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் கூறினார்.

உலமாக்களுக்கு ஓய்வூதியம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் கே.எஸ்.தென்னரசு போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து நேற்று ஈரோடு பி.பி.அக்ரஹாரம் மஜீத் வீதி, தர்கா வீதி, உதுமான்ஷா வீதி, ஈத்கா வீதி உள்ளிட்ட பல்வேறு வீதிகளில், வக்பு வாரிய முன்னாள் தலைவரும், அ.தி.மு.க. அவைத்தலைவருமான தமிழ் மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் காமராஜ், வளர்மதி, சண்முகநாதன் ஆகியோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு இரட்டை இலை சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தனர். முன்னதாக தமிழ் மகன் உசேன் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-

முஸ்லிம்களுக்கு பல்வேறு நல்ல திட்டங்களை கொண்டு வந்து, பாதுகாப்பாக அ.தி.மு.க. அரசு இருந்தது. வக்பு வாரியம் சார்பில் பள்ளிவாசல்களை புனரமைக்க நிதி கொடுத்தது அ.தி.மு.க. அரசுதான். உலமாக்களுக்கு ஓய்வூதியம் கொடுக்கும் திட்டத்தைக் கொண்டு வந்தவர் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆட்சி காலத்தில் ரூ.1,500 உலமாக்களுக்கு ஓய்வூதியமாக வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு வந்த பின்னர் ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்கினார். தற்போது 2 ஆயிரத்து 450 உலமாக்கள் ஓய்வூதியம் பெற்று வருகிறார்கள்.

சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு

ரமலான் மாதத்தில் கஞ்சி காய்ச்சுவதற்காக 5 ஆயிரத்து 400 மெட்ரிக் டன் அரிசியை அ.தி.மு.க. அரசு கொடுத்தது. சொத்து வரி, குடிநீர் வரி, குப்பை வரி, மின் கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு உயர்வுகளால் மக்களை கசக்கி பிழிந்து கொண்டிருப்பது தான் தி.மு.க. ஆட்சி. முஸ்லிம்கள் மிகப்பெரிய கட்சியில் என்னை போன்று உயர் பதவியில் வகுப்பது அ.தி.மு.க.வில் மட்டும்தான். என்றென்றும் சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பாக இருக்கக்கூடிய அரசு அ.தி.மு.க. அரசு தான்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது அவருடன் முன்னாள் துணை மேயர் கே.சி.பழனிச்சாமி, மீனவர் அணி மாவட்ட செயலாளர் எஸ்.ஏ.பாருக், பகுதி செயலாளர் ராமசாமி, கோவை புறநகர் ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் நாசர் உள்பட பலர் இருந்தனர்.


Next Story