எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. மீண்டும் ஆட்சியை பிடிக்கும்-முன்னாள் அமைச்சர் மணிகண்டன் பேச்சு
தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தெரிவித்தார்.
தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தெரிவித்தார்.
ஜெயலலிதா பிறந்த நாள் விழா
அ.தி.மு.க. முன்னாள் பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்- அமைச்சருமான ஜெயலலிதாவின் 75-வது பிறந்த நாள் விழா ராமநாதபுரத்தில் முன்னாள் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் தலைமையில் வண்டிக்காரத்தெருவில் அவரது இல்லம் முன்பாக நடைபெற்றது. அ.தி.மு.க. முன்னாள் மாவட்ட துணை செயலாளர் ராமசேது, முன்னாள் நகர் செயலாளர் கே.சி.வரதன், ராம்கோ தலைவர் சுரேஷ், இயக்குனர் தஞ்சி சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் ஜெயலலிதாவின் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். மேலும் நூற்றுக்கணக்கான ஏழை, எளியவர்களுக்கு இலவசமாக வேட்டி, சேலை மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
விழாவில் நகர் பாசறை செயலாளர் மணிகண்டன், நகர் தகவல் தொழில் நுட்ப அணி செயலாளர் ஆதில் அமீன், வார்டு செயலாளர்கள் செல்வதுரை, கதிரவன், கோகுலகிருஷ்ணன், மாரிகண்ணு, ரமேஷ், செந்தில், காளி, ராஜேசுவரன், வக்கீல் கருணாகரன், சீனியப்பா தர்கா பச்சைமால், உச்சிப்புளி ராஜேந்திரன், பாலா, ராஜேந்திரன், துரை, பாலகிருஷ்ணன், முருகேசன், ரமேஷ், சந்தோஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். நலத்திட்ட உதவிகளை வழங்கிய முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கூறியதாவது:-
தமிழக மக்கள் ஏமாற்றம்
அ.தி.மு.க.வின் கோடிக்கணக்கான தொண்டர்கள் எதிர்பார்த்தபடி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கட்சியின் நிரந்தர பொதுச்செயலாளராக பொறுப்பேற்க உள்ளார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் ஆசியுடன் கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் விரும்பிய ஒற்றைத்தலைமை அமைந்துள்ளது.
தமிழகத்தில் சாதாரண, சாமானிய, ஏழை, எளிய மக்களுக்காக பாடுபடும் இயக்கம் அ.தி.மு.க. ஒன்றுதான். அதனால்தான் பல சோதனைகள் வந்தாலும் அவற்றையெல்லாம் கடந்து மாபெரும் மக்கள் இயக்கமாக உள்ளது. தி.மு.க.வின் வாக்குறுதிகளை நம்பி வாக்களித்த தமிழக மக்கள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர். சாமானியர்கள் எடப்பாடி பழனிசாமியின் பொற்கால ஆட்சியை நினைத்து பார்க்கின்றனர்.
அ.தி.மு.க. ஆட்சியை பிடிக்கும்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் மட்டுமின்றி வரவுள்ள நாடாளுமன்ற தேர்தல், அதோடு சேர்த்து நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலிலும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடிப்பது உறுதி. தமிழ்நாட்டில் என்றைக்குமே பெரிய கட்சி, மிகப்பெரிய வாக்கு வங்கி வைத்துள்ள கட்சி அ.தி.மு.க. மட்டும்தான் என்று தேர்தல் முடிவுகள் தெளிவாக தெரிவிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.