அ.தி.மு.க. பொதுக்கூட்டம்
ஜோலார்பேட்டையில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த பாச்சல் ஊராட்சி ஆசிரியர் நகர் பகுதியில் அ.தி.மு.க. பொன்விழா நிறைவு மற்றும் 51-ம் ஆண்டு தொடக்கவிழா பொதுக்கூட்டம் ஜோலார்பேட்டை ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் நடைபெற்றது. பொதுக்கூட்டத்திற்கு திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே..சி.வீரமணி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ஆர்.ரமேஷ் வரவேற்றார். முன்னாள் அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், வைகைசெல்வன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
மாவட்ட செயலாளர் கே.சி.வீரமணி பேசுகையில் எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட அ.தி.மு.க. இயக்கம் ஆரம்பித்த போது 10 நாட்களில் காணமல் போகும் என சொன்னவர்கள் மத்தியில் இன்று 51-ம் ஆண்டில் அடி எடுத்து வைத்து வீரநடை போட்டுகொண்டு இருக்கிறது. முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா சொன்னதை போல் அ.தி.மு.க. இயக்கம் உலகம் அழியும் வரை நிலைத்து நிற்கும். தமிழகத்தில் விரைவில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைக்க இந்த கூட்டத்தின் மூலம் சபதம் ஏற்போம் என்றார்.
முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஜி.ரமேஷ், வாணியம்பாடி தொகுதி எம்.எல்.ஏ. செந்தில்குமார், நகர செயலாளர் டி.டி.குமார், ஜோலார்பேட்டை எஸ்.பி.சீனிவாசன், ஒன்றிய கவுன்சிலர் ஆர். மணிகண்டன், ஊராட்சி மன்ற தலைவர் புள்ளானேரி த.சங்கர், ஏலகிரி மலை ராஜஸ்ரீ கிரிவேலன், நகர மன்ற உறுப்பினர்கள் ஏழுமலை, மேகநாதன், மாவட்ட பிரதிநிதி நவநீதம் சேகர் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.