ஊராட்சி ஒன்றியங்களில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
தேனி மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றியங்களில் தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்பேரில், தி.மு.க. அரசை கண்டித்து தேனி மாவட்டத்தில் பேரூராட்சி அளவிலும், நகராட்சி அளவிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதன் தொடர்ச்சியாக ஊராட்சி ஒன்றியங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.
தேனி மாவட்டத்தில் தேனி, ஆண்டிப்பட்டி, கடமலை-மயிலை, போடி, பெரியகுளம், சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம் ஆகிய 8 ஒன்றிய பகுதிகளிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
தேனி ஒன்றியம்
அதன்படி, தேனி ஒன்றியம் கொடுவிலார்பட்டியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அமைப்புச் செயலாளர் ஜக்கையன் கலந்துகொண்டு, தி.மு.க. அரசை கண்டித்தும், சொத்து வரி, மின் கட்டண உயர்வு, குடிநீர் வரி, விலைவாசி உயர்வு ஆகியவற்றை கண்டித்தும் பேசினார். இதில் முன்னாள் எம்.பி. பார்த்திபன், முன்னாள் மாவட்ட செயலாளர் சிவக்குமார், மாவட்ட துணை செயலாளர்கள் சற்குணம், முருக்கோடை ராமர் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது, தி.மு.க. அரசை கண்டித்தும், குடிநீர் வரி, சொத்து வரி, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.
பெரியகுளம்
இதேபோல் பெரியகுளம் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேல்மங்கலம் பஸ்நிறுத்தம் அருகே நடந்தது. இதற்கு ஒன்றிய செயலாளரும், வடபுதுப்பட்டி ஊராட்சி தலைவருமான வீ.அன்னப்பிரகாஷ் தலைமை தாங்கினார். ஒன்றிய துணைச் செயலாளர் வைகை பாண்டி, முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் ராஜகுரு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பிரதிநிதி ஏ.எம்.பாண்டியன் வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய ஜெயலலிதா பேரவை நிர்வாகி செல்லப்பாண்டி, ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற பொறுப்பாளர் லட்சுமணன், வடுகப்பட்டி பேரூர் முன்னாள் செயலாளர் முத்துசாமி, நிர்வாகிகள் ரத்தினவேல், வக்கீல் கருப்பசாமி, சிவக்குமார், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் சாந்தி பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பால், மின்கட்டணம் மற்றும் விலைவாசி உயர்வுக்கு காரணமான தி.மு.க. அரசை கண்டித்து கோஷமிட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க.வினர் பலர் கலந்து கொண்டனர். முடிவில் கிளை செயலாளர் முத்தையா நன்றி கூறினார்.