அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை பணி
அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை பணியை சி.வி.சண்முகம் எம்.பி. தொடங்கி வைத்தார்
விழுப்புரம்:
அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட பின்பு உறுப்பினர்கள் சேர்க்கை படிவங்கள் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அ.தி.மு.க.வினரால் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி விழுப்புரம் மாவட்டத்திலும் உறுப்பினர் சேர்க்கை பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. அதற்கான படிவங்களை நேற்று விழுப்புரம் மாவட்ட கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் சி.வி.சண்முகம் எம்.பி., கட்சி நிர்வாகிகளிடம் வழங்கினார். அப்போது மாவட்டத்தில் 22 ஒன்றியங்கள், 3 நகராட்சிகள், 5 பேரூராட்சிகளில் அடிப்படை உறுப்பினர் சேர்க்கைக்கான படிவத்தை ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்களிடம் வழங்கினார்.
அதன் பிறகு சி.வி.சண்முகம் எம்.பி. பேசுகையில், பல்வேறு துரோகங்களுக்கிடையில் தி.மு.க.வை எதிர்த்து சூழ்ச்சிகளை முறியடித்து அ.தி.மு.க. வெற்றி பெற்று தலைமையை பெற்று எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தற்போது தொண்டர்கள் முழுமனதோடும், உத்வேகத்தோடும் களப்பணியாற்ற வேண்டும். எனவே அனைத்து கிளைகளிலும் புதிய உறுப்பினர்களை சேர்க்கின்ற பணிகளையும் குறிப்பாக இளைஞர்கள், இளம்பெண்களை புதிய உறுப்பினர்களாக சேர்க்கின்ற பணியில் முழுமையாக ஈடுபட வேண்டும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் வெங்கடேசன், நகர செயலாளர்கள் பசுபதி, ராமதாஸ், ஒன்றிய செயலாளர்கள் ராமதாஸ், கண்ணன், சுரேஷ்பாபு, பேட்டைமுருகன், முத்தமிழ்செல்வன், ராஜா, எசாலம் பன்னீர், மாவட்ட மாணவர் அணி செயலாளர் சக்திவேல், நகர துணை செயலாளர் வக்கீல் செந்தில், நகர எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் குமரன், நகரமன்ற கவுன்சிலர் கோல்டுசேகர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.