பாலமேடு அருகே பட்டப்பகலில் அ.தி.மு.க. கவுன்சிலர் படுகொலை- மோட்டார் சைக்கிளை வழிமறித்து கும்பல் வெறிச்செயல்


பாலமேடு அருகே பட்டப்பகலில் அ.தி.மு.க. கவுன்சிலர் படுகொலை- மோட்டார் சைக்கிளை வழிமறித்து கும்பல் வெறிச்செயல்
x

பாலமேடு அருகே பட்டப்பகலில் மோட்டார்சைக்கிளில் சென்ற அ.தி.மு.க. கவுன்சிலர் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார்

மதுரை

அலங்காநல்லூர்,

பாலமேடு அருகே பட்டப்பகலில் மோட்டார்சைக்கிளில் சென்ற அ.தி.மு.க. கவுன்சிலர் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

இந்த பயங்கர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

அ.தி.மு.க. கவுன்சிலர்

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே மாணிக்கம்பட்டி செல்லும் சாலையில், 45 வயதுடைய நபர் ஒருவர் நேற்று பகல் 11 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டு இருந்தார். அவரை வேறு மோட்டார் சைக்கிள்களில் வந்த ஒரு கும்பல் திடீரென வழிமறித்து நிறுத்தியது. உடனே அந்த நபர், சுதாரித்து தப்பிச் செல்வதற்குள் அந்த கும்பல் அவரை சரமாரியாக நடுரோட்டில் வெட்டியது.

இதில் அந்த நபர், தனது மோட்டார் சைக்கிளோடு நடுரோட்டில் விழுந்து ரத்த வெள்ளத்தில் இறந்தார். உடனே அந்த கும்பலை சேர்ந்தவர்கள், அங்கிருந்து தப்பிச் சென்றனர். ஒரு சில நிமிடங்களில் நடந்து முடிந்த இந்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்தது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் பாலமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

அ.தி.மு.க. கவுன்சிலர்

முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யபட்டவர், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா மாவுத்தன்பட்டி கிராமத்தை சேர்ந்த சந்திரபாண்டியன் (வயது 45) என்பதும், இவர் அம்மையநாயக்கனூர் (கொடைரோடு) பேரூராட்சி அ.தி.மு.க. கவுன்சிலர் என்பதும் தெரியவந்தது. சந்திரபாண்டியன், தனது மகளை பாலமேடு அருகே உள்ள லிங்கவாடியில் திருமணம் செய்து கொடுத்துள்ளார்.

தனது மகள் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்துவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பிய போதுதான் இந்த படுகொலை நடந்துள்ளது. அவரது உடலை பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

காரணம் என்ன?

முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து பாலமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி, கொலையாளிகளை தேடிவருகின்றனர். பட்டப்பகலில் அ.தி.மு.க. கவுன்சிலர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story