அ.தி.மு.க.வினர் மறியல்
அ.தி.மு.க.வினர் மறியலில் ஈடுபட்டனர்.
மதுரை விமான நிலையத்தில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மீது அ.ம.மு.க. பிரமுகர் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனை கண்டித்து பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க.வினர் நேற்று மதியம் பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, எடப்பாடி பழனிசாமி மீது பொய் வழக்கு போட்டதாக கூறி தி.மு.க. தலைமையிலான தமிழக அரசை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர். பின்னர் அவர்கள் திடீரென்று பஸ் நிலையத்துக்கு முன்புள்ள சாலைக்கு ஓடிச்சென்று அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், மறியலில் ஈடுபட்ட அ.தி.மு.க.வை சேர்ந்த 6 பெண்கள் உள்பட 95 பேரை கைது செய்து, வேன்களில் ஏற்றி அருகே உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். மேலும் மறியலில் ஈடுபட்ட 95 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.