எடப்பாடி பழனிசாமியை பாராட்டி பேசிய அ.தி.மு.க. கவுன்சிலர்களுக்கு எதிர்ப்பு


எடப்பாடி பழனிசாமியை பாராட்டி பேசிய அ.தி.மு.க. கவுன்சிலர்களுக்கு எதிர்ப்பு
x
தினத்தந்தி 31 March 2023 12:15 AM IST (Updated: 31 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டி நகராட்சி கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை பாராட்டி பேசிய அ.தி.மு.க. கவுன்சிலர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அவர்களுடன், தி.மு.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி

ஊட்டி

ஊட்டி நகராட்சி கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை பாராட்டி பேசிய அ.தி.மு.க. கவுன்சிலர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அவர்களுடன், தி.மு.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நகராட்சி கூட்டம்

ஊட்டி நகராட்சியின் மாதாந்திர கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு தலைவர் வாணீஸ்வரி தலைமை தாங்கினார். ஆணையாளர் காந்திராஜன் முன்னிலை வகித்தார். கூட்டம் தொடங்கியதும் 24-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் திவ்யா, 3-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் துர்கா ஜெயலட்சுமி ஆகியோர் தங்களது வார்டுகளில் உள்ள பிரச்சினைகள் குறித்து பலமுறை வலியுறுத்தியும், மன்ற கூட்டத்தில் விவாத பொருளாக சேர்க்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆணையாளர் மற்றும் தலைவரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து கவுன்சிலர்கள் பேசியதாவது:-

பட்பயர் உள்பட நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நகராட்சி குடியிருப்புகளில் வசிக்கும் மக்களை காலி செய்ய கூறுவதை தவிர்க்க வேண்டும். அவர்களுக்கு மறு வாடகை நிர்ணயம் செய்து, அங்கு வாழ வழி வகை செய்ய வேண்டும்.

பொது வழி அடைப்பு

நகராட்சி மார்க்கெட்டின் ஒரு பகுதியை இடித்துவிட்டு புதிதாக கடைகள் கட்டினாலும், அந்த கடைகளை ஏற்கனவே கடைகள் வைத்திருந்தவர்களுக்கு ஒதுக்க வேண்டும். காந்தல் பகுதியில் குதிரைகள் பாதுகாப்பு மையம் அமைக்க வேண்டும். வி.சி. காலனியில் பொது கழிப்பிடம் கட்டித்தர வேண்டும். ரோஸ் மவுண்ட் பகுதியில் பொது வழியை மறைத்து கற்கள் வைத்து அடைக்கப்பட்டு உள்ளதால், இரு பிரிவினரிடையே பிரச்சினை ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காண வேண்டும். வெஸ்டோடா பகுதியில் தெருவிளக்குகள் மீண்டும் ஒளிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஊட்டி நகரில் சாக்கடை கால்வாய் அடைப்புகளை சரி செய்ய வேண்டும். 35-வது வார்டில் குடிநீர் பிரச்சினையை தீர்த்து, பொது கழிப்பிடத்தை சுத்தம் செய்ய வேண்டும். மழைநீர் கால்வாய்களை தூர்வாருவதோடு ஐ பவுண்டேஷன் முதல் எச்.எம்.டி. வரை சாலையை சீரமைத்து வேகத்தடைகள் அமைக்க வேண்டும். கோடை காலம் தொடங்கியதால், அனைத்து வீடுகளுக்கும் சீராக குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வாக்குவாதம்

முன்னதாக அ.தி.மு.க. கவுன்சிலர் லயோலா குமார் எடப்பாடி பழனிசாமி கட்சி பொதுச்செயலாளராக பதவி ஏற்றதை பாராட்டி பேசினார். அப்போது, மன்ற கூட்டத்தில் வளர்ச்சி பணிகள் குறித்து மட்டுமே பேச வேண்டும் என்றும், தலைவர்கள் குறித்து பேசக்கூடாது என்றும் கூறி தி.மு.க. கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவர்களுடன் நீண்ட நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையில் கூட்டத்தில் மைக் சரிவர வேலை செய்யாததால் கவுன்சிலர்கள் தங்களது பிரச்சினையை கூற முடியாமல் தவித்தனர். அப்போது, இனிவரும் கூட்டங்களில் வார்டு பிரச்சினையை சரி செய்யும் முன்பு மைக் பிரச்சினையை சரி செய்ய வேண்டும் என்று கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.


Next Story