தி.மு.க.அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


தி.மு.க.அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x

தி.மு.க.அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருச்சி

அ.தி.மு.க. இடைக்காலப் பொதுச்செயலாளரும்,எதிர்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி மீது பொய் வழக்கு போட்டதாக கூறியும், தி.மு.க. அரசை கண்டித்தும் திருச்சி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்க்கு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் குமார், வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி, மாநகர் மாவட்ட அவை தலைவர் மலைக்கோட்டை அய்யப்பன் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் அமைப்புச் செயலாளர்கள் ரத்தினவேல், வளர்மதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். எம்.ஜி.ஆர். இளைஞரணி மாநில இணை செயலாளர் சீனிவாசன் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் தெற்கு மாவட்ட செயலாளர் குமார் பேசுகையில், ''எடப்பாடி பழனிசாமி முணுமுணுத்தார் என்ற புகாரின் பேரில் அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பொய் வழக்கை பதிவு செய்து எதிர்கட்சித்தலைவருக்கு போலீசார் அநீதி இழைத்துள்ளனர். எதிர்க்கட்சி தலைவருகே இந்நிலை என்றால் மக்களுக்கும், தொண்டர்களுக்கும் எப்படி பாதுகாப்பு கிடைக்கும். அ.தி.மு.க. ஆட்சியில் போலீசார், அதிகாரிகள் சுதந்திரமாக செயல்பட்டனர். ஆனால், தி.மு.க. ஆட்சியில் அவர்கள் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. தி.மு.க. செய்யும் தவறுகளுக்கு போலீசார், அதிகாரிகள் துணை போகக்கூடாது. 3 ஆண்டுகளில் ஆட்சி மாறும், காட்சி மாறும். அப்போது நடுநிலை தவறிய போலீஸ், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும் நிலை உருவாகும் என்பதை மறந்துவிடக்கூடாது'', என்றார். வடக்கு மாவட்டச் செயலாளர் பரஞ்ஜோதி பேசுகையில், ''மக்கள் குற்றச்சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் கொடுத்தால், குற்றவாளிகளை விட்டு விட்டு புகார் அளித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அரசாக தி.மு.க. இருக்கிறது. அ.தி.மு.க. ஆட்சியில் போலீஸ் துறையை நிர்வகித்த எடப்பாடி பழனிசாமியோ, அ.தி.மு.க.வினரோ அத்துறையின் செயல்பாட்டில் தலையிட்டது இல்லை. ஆனால், தி.மு.க. ஆட்சியில் போலீசார் தி.மு.க.வினரின் ஏஜென்டுகளாக செயல்படுகின்றனர் என்றார். ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் அமைச்சர் பூனாட்சி, ஆவின் தலைவர் கார்த்திகேயன், பகுதி செயலாளர் அன்பழகன் உள்ளிட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


Next Story