விலைவாசி உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


விலைவாசி உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 21 July 2023 2:35 AM IST (Updated: 21 July 2023 2:39 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. தலைமையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. தலைமையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கண்டன ஆர்ப்பாட்டம்

மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை குறைக்க வேண்டும். தமிழகத்தில் அனைத்து துறைகளில் ஊழல் தலைவிரித்து ஆடுவதையும் கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியும், தி.மு.க. அரசைக் கண்டித்தும் நேற்று தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. சார்ப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதேபோல் குமரி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு அ.தி.மு.க. மாநில அமைப்புச் செயலாளர் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, தொடங்கி வைத்தார். நாகர்கோவில் மாநகராட்சி கவுன்சிலர் அக்ஷயா கண்ணன் வரவேற்று பேசினார். முன்னாள் அமைச்சர் கே.டி.பச்சைமால், மேற்கு மாவட்ட செயலாளர் ஜான் தங்கம், அவை தலைவர்கள் சேவியர் மனோகரன், சிவகுற்றாலம், மாநில நிர்வாகிகள் கிருஷ்ணதாஸ், சிவசெல்வராஜன், மாவட்ட நிர்வாகிகள் பரமேஸ்வரன், பார்வதி, ஆர்.ஜே.கே. திலக், பகுதிச் செயலாளர்கள் ஜெய கோபால், முருகேஸ்வரன், ஜெவின் விசு, ஒன்றிய செயலாளர்கள் ஜீன்ஸ், ஜெய சுதர்சன், மாநகராட்சி கவுன்சிலர்கள் அனிலா சுகுமாரன், சேகர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. பேசும்போது கூறியதாவது:-

வீட்டுக்கு அனுப்ப வேண்டும்

குமரி முதல் டெல்லி வரை நாட்டை காப்பாற்ற தகுதியானவர் எடப்பாடி பழனிசாமிதான். தி.மு.க. ஆட்சியில் ஊழல் செய்தவர்கள் சிறையில் உள்ளனர். இரண்டு அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் மாதம் ரூ.10 ஆயிரம் இருந்தால் ஒரு குடும்பத்தை நடத்தி விடலாம் என்ற நிலை இருந்தது. தற்போது ரூ.20 ஆயிரம் இருந்தால்கூட குடும்பத்தை நடத்த முடியாத அளவிற்கு விலைவாசி உயர்ந்துள்ளது. இதன் மூலமாக தி.மு.க. ஆட்சியின் நிர்வாக திறமையின்மை தெரிய வந்துள்ளது. இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவதற்கு மக்கள் தயாராக வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் தமிழக அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

காய்கறி மாலை

ஆர்ப்பாட்டத்தில் விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பல்லாரி, இஞ்சி, தக்காளி, மிளகாய் மற்றும் பருப்பு ஆகியவற்றை ஆர்ப்பாட்ட மேடையின் முன்பு வைத்து, அவற்றின் விலைகளை குறிப்பிட்டு நூதனமுறையில் அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநகராட்சி கவுன்சிலர் ஸ்ரீலிஜா, தோவாளை யூனியன் தலைவர் சாந்தினி பகவதியப்பன் உள்ளிட்ட பெண்கள் தக்காளி, வெண்டைக்காய், பாகற்காய் உள்ளிட்ட காய்கறிகளை கழுத்தில் மாலையாக அணிந்து கலந்து கொண்டனர். இதனால் ஆர்ப்பாட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மெர்லியன்ட் தாஸ், ஒன்றிய செயலாளர்கள் குற்றியார் நிமால், ஜெசீம், பொன் சுந்தர்நாத், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் கிருஷ்ணகுமார், வெங்கடேஷ், வினோஜ், வடிவை மாதவன் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Next Story