செல்லூர் ராஜூ, உதயகுமார், ராஜன் செல்லப்பா தலைமையில் விலைவாசி உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


செல்லூர் ராஜூ, உதயகுமார், ராஜன் செல்லப்பா தலைமையில் விலைவாசி உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x

விலைவாசி உயர்வை கண்டித்து செல்லூர் ராஜூ, உதயகுமார், ராஜன் செல்லப்பா தலைமையில் அ.தி.மு.க.வினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மதுரை


விலைவாசி உயர்வை கண்டித்து செல்லூர் ராஜூ, உதயகுமார், ராஜன் செல்லப்பா தலைமையில் அ.தி.மு.க.வினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அமைச்சர்கள் மீது வழக்கு

தமிழகத்தில் விலைவாசி உயர்வை கண்டித்து, தமிழகம் முழுவதும் 20-ந் தேதி அ.தி.மு.க. சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று கட்சியின் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார். அதன்படி, மதுரையில் ஆர்ப்பாட்டம் பெத்தானியாபுரத்தில் நடந்தது. ஏற்பாடுகளை மதுரை மாநகர், மதுரை புறநகர் கிழக்கு, மதுரை புறநகர் மேற்கு ஆகிய மாவட்டங்கள் சார்பாக செய்யப்பட்டு இருந்தது. முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, உதயகுமார் மற்றும் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராஜ்சத்யன், பெரிய புள்ளான் எம்.எல்.ஏ., மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ரமேஷ், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் டாக்டர் பி.சரவணன், தமிழரசன், தவசி, எஸ்.எஸ்.சரவணன், வி.ஆர்.ராஜாங்கம், நீதிபதி, கருப்பையா, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது ராஜன் செல்லப்பா பேசியதாவது:- தி.மு.க. எம்.பி.க்கள் மக்களுக்காக எந்த குரலும் கொடுக்கவில்லை. கனிமொழி, ராஜா ஆகியோர் மீது வழக்கு நிலுவையில் உள்ளது. நெல்லை எம்.பி. ஞானதுரை, பிஷப்பை தாக்கியதாக வழக்கு உள்ளது. இவர்கள் எப்படி மக்களுக்காக குரல் கொடுப்பார்கள். தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையில்தான் கூட்டணி அமையும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்து விட்டார். இன்றைக்கு தி.மு.க. அமைச்சர்கள் இருவர் மீது அமலாக்கத்துறை வழக்கு போட்டு உள்ளது. மேலும் அனிதா ராதாகிருஷ்ணன், சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம்தென்னரசு, நேரு உள்ளிட்ட 9 அமைச்சர்கள் மீது வழக்கு நிலுவையில் உள்ளது. ஊழலுக்காக நாட்டில் கலைக்கப்பட்ட ஒரே அரசு தி.மு.க. அரசு தான். தற்போது மீண்டும் அவர்களுக்கு அந்த நிலை வர போகிறது. தி.மு.க. எப்போது வீட்டுக்கு போகும், எடப்பாடி பழனிசாமி எப்போது ஆட்சிக்கு வருவார் என்று மக்கள் நினைக்கிறார்கள். மகளிர் உரிமை தொகை வருகிற செப்டம்பர் 15-ம் தேதி வழங்குவோம் என்று கூறி உள்ளார்கள். அதற்குள்ளாக ஆட்சி இருக்குமா? என்ற நிலையில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

கோட்டை

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:- மக்களுக்கு எதிராக ஆட்சி நடத்தி வரும் தி.மு.க. அரசுக்கு எதிராக, எடப்பாடி பழனிசாமி தினமும் ஆர்ப்பாட்டம் அறிவித்தாலும் தொண்டர்கள் பங்கேற்பார்கள். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை வீட்டுக்கு அனுப்பி விட்டு, எடப்பாடி பழனிசாமியை கோட்டைக்கு அனுப்பும் வரை உரிமை குரல் எழுப்பி கொண்டே இருப்போம். இன்றைக்கு விலைவாசி கடுமையாக உயர்ந்து விட்டது. சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்து வருகிறது. முதல்-அமைச்சருக்கு நிர்வாகம் செய்ய தெரியவில்லை, அமைச்சர்களை கட்டுப்படுத்த தெரியவில்லை. முதல்-அமைச்சர் பாட்னா செல்லும்போது செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்தது., பெங்களூரு செல்லும் பொழுது பொன்முடி. அடுத்து மும்பை செல்லும் பொழுது தி.மு.க. ஆட்சியே கலைக்கப்பட்டு விடும். அமலாக்க துறை டிரைலர்தான் வெளியிட்டுள்ளது. விரைவில் மெயின்பிக்சர் வெளியாகும். அப்போது தி.மு.க.வே காணாமல் போய்விடும். அந்த மெயின் பிக்சரில் ரூ.30 ஆயிரம் கோடி கொள்ளையடித்தவர்கள் சிக்கி கொள்வார்கள்.

மவுன சாமியார்

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது:- இன்றைக்கு விலைவாசி உயர்ந்துவிட்டது. ஆண்டிகள் மடம் கட்டியது போல, 26 கட்சிகள் பெங்களூரில் கூடினர். கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அதில் கலந்து கொண்ட கட்சி எல்லாம் ஊழலில் திளைத்த கட்சிகள். ஆனால் 38 கட்சிகள் பிரதமர் மோடி தலைமையில் கூடியது. இதுதான் உண்மையான ஜனநாயக கூட்டணி. அங்கு எடப்பாடி பழனிசாமிக்கு மிகப்பெரிய மரியாதை அளிக்கப்பட்டது. ஆனால் ஸ்டாலின் கலந்து கொண்ட கூட்டத்தில் பிரதமர் யார் என்று கூட அறிவிக்க முடியவில்லை. தி.மு.க கூட்டணி கட்சிகளான கம்யூனிஸ்டு, வைகோ, காங்கிரஸ் கட்சிகள் எம்.பி. சீட்டுக்காக மவுன சாமியார்களாக மாறிவிட்டார்கள். அமலாக்க துறையினால் அமைச்சர்கள் தூக்கத்தை தொலைத்து தவிக்கிறார்கள்.

இன்றைக்கு ஆயிரம் ரூபாய்க்கு டோக்கன் வழங்குகிறார்கள். ஆனால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10 ஆயிரம் ரூபாய் அளவில் விலை ஏற்றத்தை சுமத்தி தலையில் வைத்து விட்டார்கள். இனி ஸ்டாலின் ரூ.5 ஆயிரம் கொடுத்தால் கூட யாரும் ஓட்டு போட மாட்டார்கள். மது குடிப்பது பற்றி அமைச்சர் கவலைப்பட்டு குடிகாரர் என்று கூறக்கூடாது என்று கூறுகிறார். அப்படி என்றால் மது தியாகி என்று பெயர் வைக்கலாமா? இங்கிலாந்து, ஸ்காட்லாந்துக்கு நிகராக இருந்த தமிழக காவல்துறை இன்றைக்கு, அவமானப்பட்டு கிடக்கிறது. ஊழலுக்காக தி.மு.க. அரசு கலைக்கப்படலாம். அப்படி கலைத்தால் இனி தமிழகத்தில் மீண்டும் தி.மு.க. ஆட்சியே கிடையாது.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story