செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 22 Jun 2023 1:22 AM IST (Updated: 22 Jun 2023 5:27 PM IST)
t-max-icont-min-icon

அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி

ஆர்ப்பாட்டம்

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும், விலைவாசி உயர்வு, சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகளை கண்டித்தும் திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகே திருச்சி ஒருங்கிணைந்த மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. குமார் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.பி. ரத்தினவேல் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் தொழில்துறை அமைச்சர் மோகன் கலந்து கொண்டார். அவைத்தலைவர் அய்யப்பன் வரவேற்று பேசினார். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.பி. குமார் பேசுகையில், அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோருக்கு இதயத்தில் எத்தனை அடைப்பு உள்ளது என்பதை அமலாக்கத்துறை விரைவில் கண்டறியும் என்றார்.

போக்குவரத்து பாதிப்பு

ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் பரஞ்ஜோதி, என்.ஆர்.சிவபதி, வளர்மதி, அண்ணாவி, முன்னாள் அரசு கொறடா மனோகரன், எம்.ஜி.ஆர். இளைஞர்அணி மாநில இணை செயலாளர் சீனிவாசன், மாநகர் மாவட்ட மாணவர் அணி செயலாளர் கார்த்திகேயன், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் முத்துக்குமார் உள்ளிட்ட மாவட்ட பொறுப்பாளர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது அ.தி.மு.க. தொண்டர்கள் சாலையை ஆக்கிரமித்து நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஸ்ரீரங்கம் சரக போலீஸ் உதவி கமிஷனர் நிவேதா லட்சுமி மற்றும் போக்குவரத்து போலீசார் அ.தி.மு.க. தொண்டர்களை போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தாமல் சாலையோரமாக செல்லுமாறு கூறினர். இதனால் தொண்டர்களுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆனாலும் இறுதிவரை தொண்டர்கள் சாலையை விட்டு நகரவே இல்லை. போலீஸ் உதவி கமிஷனரிடம் அ.தி.மு.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story