மின் கட்டண உயர்வை கண்டித்து ஓமலூரில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
மின் கட்டண உயர்வை கண்டித்து ஓமலூரில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஓமலூர்:
கண்டன ஆர்ப்பாட்டம்
ஓமலூர் பஸ் நிலையம் அருகே சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பொதுமக்களை பெரிதும் பாதிக்கும் வகையில் கடுமையான மின் கட்டண உயர்வு, வீட்டு வரி உயர்வு, விலைவாசி உயர்வு, பெண்கள், மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமை தாங்கினார். புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் மணி எம்.எல்.ஏ. வரவேற்றார்.
எம்.எல்.ஏ.க்கள் ஜெயசங்கரன், நல்லதம்பி, சித்ரா, ராஜமுத்து, சுந்தர்ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செம்மலை கண்டன உரையாற்றினார்.
நீட் தேர்வு
இதில் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் பேசும் போது, தி.மு.க. அரசை கண்டித்து நடக்கும் ஆர்ப்பாட்டம் போன்று இல்லாமல், மாநாடு போல் உள்ளது. தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பதாக தெரிவித்தனர். ஆனால் இதுவரை குறைக்கவில்லை. மின் கட்டண உயர்வால் பாதிக்கப்படுவார்கள். அ.தி.மு.க. ஆட்சியில் காவல்துறை ஸ்காட்லாந்து காவல்துறைக்கு இணையாக இருந்தது. தற்போது கட்டப்பஞ்சாயத்து காவல்துறையாக உள்ளது. காடையாம்பட்டி ஒன்றியக்குழு தலைவர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவராகவும், ஏற்காடு ஒன்றியக்குழு தலைவர் பழங்குடி இனத்தை சேர்ந்தவராகவும் உள்ளனர். அவர்களை பணி செய்ய விடாமல் ஒன்றிய ஆணையாளர்கள் மிரட்டுகின்றனர். இதை கண்டித்து அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் அனுமதி பெற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார்.
தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செம்மலை பேசும் போது, தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சொத்து வரியை உயர்த்த மாட்டோம் என கூறினர். ஆனால் 3 மடங்கு உயர்த்தி உள்ளனர். அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட 2 ஆயிரம் அம்மா மினி கிளினிக்குகளை மூடிவிட்டனர். நீட் தேர்வை ஒழித்து விடுவோம் என்று கூறினர். ஆனால் முடியவில்லை. அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை திறந்து வைக்கின்றனர். தி.மு.க. அரசால் எந்த திட்டமும் கொண்டுவரவில்லை என்று கூறினார்.
கலந்து கொண்டவர்கள்
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பல்பாக்கி கிருஷ்ணன், வெற்றிவேல், ராஜா, மாநில பொதுக்குழு உறுப்பினர் வெங்கடாசலம், ஒன்றிய செயலாளர்கள் ராஜேந்திரன் அசோகன், கோவிந்தராஜ், மணிமுத்து, சேரன் செங்குட்டுவன், சுப்பிரமணியம், மாவட்ட இணைச்செயலாளர் ஈஸ்வரி பாண்டுரங்கன், நகர செயலாளர்கள் சரவணன், கோவிந்தசாமி, மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் ராஜராஜசோழன், இணை செயலாளர் வாசுதேவன், புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் அருண்குமார், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஜெயகாந்தன், ஒன்றிய தலைவர் குருபாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் தி.மு.க. அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.