அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வின் அண்ணன் வீட்டில் கொள்ளை
வாணியம்பாடி அருகே அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வின் அண்ணன் வீடு உள்பட 11 வீடுகள் மற்றும் கோவில் உண்டியலில் கொள்ளை சம்பவம் நடந்தது. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாணியம்பாடி அருகே அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வின் அண்ணன் வீடு உள்பட 11 வீடுகள் மற்றும் கோவில் உண்டியலில் கொள்ளை சம்பவம் நடந்தது. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
எம்.எல்.ஏ.அசோக்குமாரின் அண்ணன்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த முல்லை கிராமத்தில் பூட்டியிருந்த வீடுகளை குறி வைத்து மர்ம நபர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். கொள்ளை சம்பவம் நடந்த வீடுகளின் உரிமையாளர்கள் மருத்துவமனை, கோவில் திருவிழா என பல்வேறு காரணங்களுக்காக வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றிருந்தனர்.
மேலும் வாணியம்பாடி பகுதியில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் விட்டு விட்டு பெய்த மழையை சாதகமாக பயன்படுத்திய மர்ம நபர்கள் முல்லை கிராமத்தில் கிருஷ்ணகிரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமாரின் அண்ணன் ரவீந்தர்குமார் வீடு உள்பட 11 வீடுகிளின் பூட்டை உடைத்து உள்ளே சென்று கொள்ளையடித்துள்ளனர். அதில் ரவீந்திரகுமார் வீட்டில் 7 பவுன் நகை, ரூ.40 ஆயிரம் மற்றும் வெள்ளிப்பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
தீவிர விசாரணை
அதேபோல் விஜயா என்பவர் வீட்டில் 2 பவுன் நகை, ரூ.5 ஆயிரம், நூருன்னிஷா என்பவர் வீட்டில் ரூ.30 ஆயிரம், ஒரு பவுன் நகை, தில்சாத் என்பவர் வீட்டில் ரூ.35 ஆயிரம், தஸ்தகீர் என்பவர் வீட்டில் ரூ.20 ஆயிரத்தை கொள்ளையடித்துள்ளனர்.
மற்ற நபர்களின் வீடுகளுக்கு அதன் உரிமையாளர்கள் வராததால் கொள்ளை போன பணம், பொருட்களின் விவரம் இன்னும் தெரியவில்லை. இதுவரை கிடைத்த புகாரின் படி மொத்தம் 10 பவுன் நகைகள், ரூ.2 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.
மேலும் கிராமத்தின் மையப் பகுதியில் உள்ள முருகன் கோவில் உண்டியலை உடைத்து, அதிலிருந்த காணிக்கை பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துள்ளனர்.
மேற்கண்ட கொள்ளை சம்பவம் குறித்து வீட்டின் உரிமையாளர்கள் ஆலங்காயம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரபரப்பு
முல்லை கிராமத்தில் அடுத்தடுத்து 11 வீடுகள் மற்றும் கோவிலில் நடந்த கொள்ளை சம்பவத்தால் மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.