அ.தி.மு.க. கொடியை சசிகலா பயன்படுத்தும் விவகாரம்: ஜெயக்குமார் கோர்ட்டில் வாக்குமூலம்


அ.தி.மு.க. கொடியை சசிகலா பயன்படுத்தும் விவகாரம்: ஜெயக்குமார் கோர்ட்டில் வாக்குமூலம்
x

அ.தி.மு.க. கொடியை சசிகலா பயன்படுத்தும் விவகாரம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜராகி 1 மணி நேரம் வாக்குமூலம் அளித்தார்.

ஆலந்தூர்,

அ.தி.மு.க. கொடி மற்றும் பொதுச்செயலாளர் பெயரை பயன்படுத்தும் சசிகலா மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிடக்கோரி சென்னை சைதாப்பேட்டை பெருநகர 17-வது கோர்ட்டில் முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. அமைப்பு செயலாளருமான ஜெயக்குமார் கடந்த ஜனவரி மாதம் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கோர்ட்டில் ஆஜராகி சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேல் வாக்குமூலம் அளித்தார்.

பின்னர் நிருபர்களிடம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-

குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி

அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தன்னை அறிவிக்க வேண்டும் என்ற சசிகலாவின் மனுவை தேர்தல் ஆணையம் மட்டுமின்றி கோர்ட்டுகளும் நிராகரித்து விட்டது. ஆனாலும் கட்சியினர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும். பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு செயல்படும் சசிகலாவின் இந்த செயல் சட்டத்துக்கு உட்பட்டது அல்ல.

சட்டத்தை மதிக்காமல், உள்நோக்கத்தோடு எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்துக்கு சென்று அங்கு கல்வெட்டை திறந்து வைத்து, கொடியை ஏற்றினார். அந்த கல்வெட்டில் தன்னை பொதுச்செயலாளர் என்று போட்டு கொண்டார். இது குறித்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தால் அந்த மனுவை வாங்கி கொண்டு ரசீது மட்டும் அளித்தார்கள். ஆனால் சசிகலா மீது எப்.ஐ.ஆர். போடவில்லை.

கோர்ட்டு நடவடிக்கை

இதனால் கோர்ட்டுக்கு வந்து விட்டோம். கோர்ட்டில் ஒரு மணி நேரத்துக்கு மேல் வாக்குமூலம் அளித்தேன். பல்வேறு பிரிவுகளை குறிப்பிட்டு கட்சிக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் எங்கள் கொடியை பயன்படுத்தக்கூடாது என வலியுறுத்தி உள்ளேன்.

மேற்கொண்டு கோர்ட்டு நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்திய தண்டனை சட்டப்படி அவர்கள் குற்றம் புரிந்தவர்கள் என்பதை நாங்கள் தெளிவாக கூறி உள்ளோம். எனது வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளார்கள். இந்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் நாங்கள் குறிப்பிட்ட சட்ட பிரிவுகளின் கீழ் சசிகலா மீது கோர்ட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story