எடப்பாடி பழனிசாமி பக்கமே அ.தி.மு.க. தொண்டர்கள் உள்ளனர்-முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேட்டி
எடப்பாடி பழனிசாமி பக்கமே அ.தி.மு.க. தொண்டர்கள் உள்ளனர்-முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேட்டி
திருமங்கலம்
எடப்பாடி பழனிசாமி பக்கமே அ.தி.மு.க. தொண்டர்கள் உள்ளனர் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
மாணவிகளுக்கு பாராட்டு
இஸ்ரோ சார்பில் செயற்கைக்கோள் மென்பொருள்களை தயாரிப்பதற்காக ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் 10 மாணவிகளை இஸ்ரோ தேர்வு செய்தது. இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 11-ம் வகுப்பு மாணவிகள் 10 பேர் தேர்வு செய்யப்பட்டு செயற்கை கோளுக்கான மென்பொருள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் ஸ்ரீஹரிகோட்டா சென்று வந்தனர். அந்த மாணவிகளை முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நேரில் சந்தித்து பாராட்டினார். இதனைத் தொடர்ந்து ஒன்றிய அளவில் செஸ் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளையும் பாராட்டினார். பின்னர் அவர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இஸ்ரோவின் சார்பில் செலுத்தப்பட்ட மென்பொருளை தயாரிக்க மாணவிகள் முன் வந்தது பாராட்டுக்குரியது. முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி சார்பில் நேரில் வந்து சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளோம்.
தொண்டர்கள்
நேற்று ஓ.பன்னீர்செல்வம் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் எதிர்பார்த்தவர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. இந்த ஆலோசனைக் கூட்டம் தோல்வியை தழுவியுள்ளது. ஆனால் எடப்பாடி பழனிசாமி செல்லும் இடங்களில் எல்லாம் திரளும் தொண்டர்கள் கூட்டம் வெற்றிக்கு சாட்சியாக அமைந்துள்ளது. இதிலிருந்து தொண்டர்கள் யார் பக்கம் இருக்கிறார்கள் என்பது தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.
சோழவந்தான்
மேலும் சோழவந்தான் அருகே வைகை ஆற்றில் நேற்று முன்தினம் குளிக்க சென்ற வினோத்குமார், அன்பரசன் ஆகியோர் தண்ணீரில் மூழ்கினர். இதில் அன்பரசன் உயிரிழந்தார். ஆற்றில் அடித்து செல்லப்பட்டு மாயமான வினோத்குமாரை தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர். வைகை ஆற்றில் வினோத்குமாரை தேடும் இடத்தை நேரில் வந்து ஆர்.பி. உதயகுமார் பார்வையிட்டார். பின்னர் அன்பரசன், வினோத்குமார் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். பின்னர் அவர் கூறியதாவது, தி.மு.க. அரசு பேரிடர் காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தவறிவிட்டது, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் இது போன்ற உயிர்ப்பலி ஏற்பட்டிருக்காது. மதுரையில் சில நாட்களுக்கு முன்பாக கனமழையால் நான்கு பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். இதுவரை அவர்களுக்கு எந்த நிவாரண உதவியும் கொடுக்கவில்லை என்றார்.