அ.தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களையே முதல்-அமைச்சர் திறந்து வைக்கிறார்-எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேச்சு


அ.தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களையே முதல்-அமைச்சர் திறந்து வைக்கிறார்-எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேச்சு
x

சேலத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களையே முதல்- அமைச்சர் திறந்து வைக்க வருகிறார் என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.

சேலம்

எடப்பாடி:

அ.தி.மு.க. கொடியேற்று விழா

சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த புறவட்டச் சாலை பகுதியில் நகர அ.தி.மு.க. சார்பில் கொடியேற்று விழா நடந்தது. நகர செயலாளர் ஏ.எம். முருகன் தலைமை தாங்கினார். விழாவில் சிறப்பு விருந்தினராக அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு அ.தி.மு.க. கொடியை ஏற்றி வைத்தார்.

பின்னர் நடந்த பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தி.மு.க. அரசு மீது குற்றம்சாட்டி பரபரப்பாக பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழகம் முழுவதும் கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்ட பணிகளையே, தற்போதைய தி.மு.க. அரசு திறந்து வைத்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இது வேறொருவர் பெற்ற பிள்ளைக்கு பெயர் வைப்பதற்கு ஒப்பான செயலாகும்.

அம்மா உணவகத்தை மூட முயற்சி

குறிப்பாக சேலம் மாவட்டத்தில் கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்ட பணிகளை திறந்து வைக்கவே தமிழ்நாடு முதல்- அமைச்சர் சேலம் வருகை தர உள்ளார். அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட அம்மா மினி கிளினிக், குடி மராமத்து பணி திட்டம், சேலம் மாவட்டத்தில் 100 ஏரி பாசன திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்ட பணிகளை முடக்கியதுடன், அம்மா உணவகங்களையும் மூடுவதற்கான ஏற்பாடுகளை தி.மு.க. அரசு செய்து வருகிறது. தமிழகம் முழுவதும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு மதுக்கடைகளில் கடந்த 2 ஆண்டுகளாக 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அனுமதி பெறாத பார்களை நடத்திய தி.மு.க.வினர், போலி மதுபானங்கள் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளனர்.

இவ்வாறு தி.மு.க. அரசின் பல்வேறு துறைகள் மூலம் நடைபெறும் ஊழலால் வரும் வருமானம் குறித்து தி.மு.க. அமைச்சரே குற்றம் சாட்டியது ஆடியோ மூலம் வெளியாகியுள்ளது. தற்போது மாநிலம் முழுவதும் சட்டம்- ஒழுங்கு மோசமாக உள்ளது. நவீன முறையில் பல குற்றங்கள் நடந்து வருகிறது. காவல்துறையில் நல்ல அதிகாரிகள் முடக்கப்படுகிறார்கள். அரசுக்கு இணக்கமான அதிகாரிகளுக்கு வாய்ப்பளிக்கப்படுகிறது. இதற்கு உதாரணமாக சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய காவல்துறையினரே கடைகளில் கட்டாய மாமுல் வசூல் செய்யும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது.

வாரிசு அரசியல்

மக்கள் துன்பப்படும் வகையில் மின் கட்டணம், பால் விலை உயர்வு, அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு உள்ளிட்ட வரிச் சுமையை தி.மு.க. அரசு அதிகரித்துள்ளது. தமிழக முதல்- அமைச்சர் தன்னுடைய தந்தைக்கு நினைவு சின்னம் அமைப்பதில் காட்டும் ஆர்வத்தை, தமிழக மக்களின் முன்னேற்றத்திற்கும், அவர்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்த்து வைக்கவும் காட்டுவதில்லை. வாரிசு அரசியலை முன்னெடுத்துச் செல்வதில்தான் தி.மு.க. அரசு முனைப்பு காட்டி வருகிறது.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் வெங்கடாசலம், ஒன்றிய செயலாளர்கள் பக்கநாடு மாதேஸ், மாதேஸ்வரன், ராஜேந்திரன், ஒன்றியக்குழு தலைவர் கரட்டூர் மணி, முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் டி.கதிரேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story